வேடசந்தூர் அருகே ரேஷன் அரிசி கடத்தி சென்ற லாரி கவிழ்ந்தது

வேடசந்தூர் அருகே ரேஷன் அரிசி கடத்தி சென்ற லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

Update: 2021-10-05 18:55 GMT
வேடசந்தூர்:
மதுரையில் இருந்து திண்டுக்கல் வழியாக நாமக்கல் நோக்கி லாரி ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை மதுரை பெருங்குடியைச் சேர்ந்த வல்லரசு (வயது 22) என்பவர் ஓட்டினார். திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில் வேடசந்தூரை அடுத்த மினுக்கம்பட்டி பிரிவு அருகே அந்த லாரி வந்தபோது, அதன் பின்பக்க டயர் திடீரென்று வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் நடுவே இருந்த தடுப்புசுவரில் மோதி கவிழ்ந்தது. இதில், டிரைவர் வல்லரசு லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். மேலும் இந்த விபத்து காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் சாலையில் கவிழ்ந்த லாரியை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். அப்போது லாரியில் இருந்த சாக்கு மூட்டைகளை போலீசார் பார்த்தபோது, அதனுள் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. பின்னர் இதுதொடர்பாக டிரைவர் வல்லரசுவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், மதுரையை சேர்ந்த சுப்பிரமணி (54) என்பவருக்காக 30 மூட்டை ரேஷன் அரிசியை  நாமக்கல்லுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. மேலும் அந்த லாரியில் கோழித்தீவனம் கொண்டு செல்வதாக போலி ரசீது தயாரித்து, ரேஷன் அரிசியை கடத்தி சென்றது தெரியவந்தது. 
இதைத்தொடர்ந்து ரேஷன் அரிசி மற்றும் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் பிடிபட்ட வல்லரசுவிடம் ெதாடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

மேலும் செய்திகள்