பொள்ளாச்சி
தொடர்மழை காரணமாக கொப்பரை தேங்காய் வரத்து குறைந்தது. அத்துடன் அதன் விலையும் சரிந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
கொப்பரை தேங்காய் ஏலம்
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதற்கு விற்பனை கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் தலைமை தாங்கினார்.
பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொப்பரை தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். கொப்பரை தேங்காய்கள் தரம் பிரித்து ஏலம் விடப்பட்டது.
84 வியாபாரிகள் 457 மூட்டை கொப்பரை தேங்காயை விற்பனைக்கு கொண்டு வந்தனர். 9 வியாபாரிகள் கலந்துகொண்டு ஏலம் எடுத்தனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடந்த வாரத்தை விட கொப்பரை தேங்காய் வரத்து குறைந்து இருந்தது. அதுபோன்று விலை அதிகரிக்காததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் கூறியதாவது:-
விலை குறைந்தது
கடந்த வாரம் கொப்பரை தேங்காய் வரத்தும் மற்றும் விலை அதிகரித்து இருந்தது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் கொப்பரை தேங்காய்களை வெயிலில் காய வைக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இதன் காரணமாக கடந்த வாரத்தை விட 146 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்து குறைந்து உள்ளது.
241 மூட்டை முதல் தர கொப்பரை தேங்காய் கிலோவுக்கு ரூ.91 முதல் ரூ.96.40 வரையும், 457 மூட்டை 2-ம் தர கொப்பரை தேங்காய் ரூ.72.50 முதல் ரூ.84.20 வரையும் விலை போனது. கடந்த வாரம் கிலோவுக்கு ரூ.102.50 வரை கொப்பரை தேங்காய் விலை போனது. இந்த வாரம் எண்ணெய் மார்க்கெட்டில் விலை சரிந்ததால் கிலோவுக்கு ரூ.6.10 வரை விலை குறைந்தது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.