காயத்துடன் பிடிபட்ட புலிக்குட்டிக்கு தீவிர சிகிச்சை

காயத்துடன் பிடிபட்ட புலிக்குட்டிக்கு தீவிர சிகிச்சை;

Update: 2021-10-05 17:38 GMT
வால்பாறை

வால்பாறை முடீஸ் பகுதியில் காயத்துடன் பிடிபட்ட புலிக் குட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அதன் உடல்நலம் முன்னேற்றம் அடைந்து வருவதாக வனத்துறை யினர் தெரிவித்தனர். 

புலிக்குட்டி பிடிபட்டது 

வால்பாறை அருகில் உள்ள முடீஸ் பஜார் பகுதியில் கடந்த 27-ந் தேதி உடல் சோர்வுற்ற நிலையில் ஒரு புலிக்குட்டி நடந்து சென்றது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 


பின்னர் 28-ந் தேதி அந்த புலிக்குட்டியை வனத்துறையினர் பிடித்தனர். அதன் உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. பின்னர் அதை வனத்துறையினர் மனித-வனவிலங்குகள் மோதல் தடுப்பு மையத்துக்கு கொண்டு சென்று கூண்டில் அடைத்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். 

தீவிர சிகிச்சை 

8 மாத வயதான அந்த புலிக்குட்டி, முள்ளம்பன்றியை வேட்டையாடி உள்ளது. இதனால் அதன் உடலின் வெளிப்பகுதி யிலும், உள்பகுதியிலும் காயங்கள் ஏற்பட்டு உள்ளன. அத்துடன் அதன் எச்சத்தில் இருந்து முள்ளம்பன்றியின் முள் வந்து கொண்டே இருக்கிறது. 

எனவே அந்த குட்டிக்கு உடல்வலி, வயிறு வலிக்கான மருந்து மாத்திரை கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய மருந்துகள் ஊசி மூலம் செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன் அதன் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

உடல்நிலையில் முன்னேற்றம் 

புலிக்குட்டியின் தாய் புலியை கண்காணிக்க ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி குட்டியை பிடித்த இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி அந்த புலியை கண்காணித்து வருகிறோம். தற்போது புலிக்குட்டி காயத்தில் இருந்து மீண்டு வருகிறது. அதன் உடல்நிலை நன்றாக முன்னேற்றம் கண்டுவருவதுடன், சுறுசுறுப் பாக இருக்கிறது. 

எனவே அதை விரைவில் அதன் தாயுடன் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். அதன் உடல்நிலை நன்றாக முன்னேற்றம் அடைய மாட்டிறைச்சி, மட்டன் சூப் ஆகிய உணவுகளும் வழங்கப்பட்டு வருகிறது.  இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்