தெள்ளார் அருகே பல்லவர் கால அய்யனார் சிலை கண்டெடுப்பு

தெள்ளார் அருகே நல்லூரில் பல்லவர் கால அய்யனார் சிலை கண்டெடுக்கப்பட்டது.

Update: 2021-10-05 17:36 GMT
திருவண்ணாமலை

தெள்ளார் அருகே நல்லூரில் பல்லவர் கால அய்யனார் சிலை கண்டெடுக்கப்பட்டது. 

அய்யனார் சிலை

திருவண்ணாமலை மரபுசார் அமைப்பைச் சேர்ந்த ராஜ்பன்னீர்செல்வம், உதயராஜா மற்றும் சரவணன் ஆகியோர் இணைந்து தெள்ளார் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் பாரதிராஜா அளித்த தகவலின் பேரில் நல்லூரில் உள்ள விவசாய நிலத்தில் உள்ள சிற்பத்தை காணச் சென்றனர். 

நல்லூரில் இருந்து பெரியகுப்பம் செல்லும் சாலையில் இடது புறம் உள்ள விவசாய நிலத்தில் மண்ணில் சாய்ந்த நிலையில் ஒரு பலகை சிற்பம் இருந்தது. அதனை அவர்கள் சுத்தம் செய்து ஆய்வு செய்தனர். அதில் அந்த சிற்பம் பல்லவர் கால அய்யனார் சிலை என்பது கண்டறியப்பட்டது. 
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

4 அடி உயரம்

சுமார் 3½ அடி அகலமும், 4 அடி உயரமும் கொண்ட பலகை கல்லில் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டு உள்ளது. அழகிய ஜடாபாரம் தலையை அலங்கரிக்க, வட்டமான முகத்தில் தடித்த உதடுகளுடன் இரு காதுகளிலும் பத்ர குண்டலம் அணிந்து காட்சி தருகிறார். கழுத்தில் உருண்டையான மணிகள் கோர்க்கப்பட்ட சரப்பளி போன்ற மாலையையும், இரு கைகளில் தோள்வளை மற்றும் கைவளை அணிந்து உத்குதிகாசன கோலத்தில் ஒரு வலது காலை மடக்கியும், இடது காலை தொங்கவிட்டும் அமர்ந்துள்ளார். இடையில் உதிரபந்தமும், இடை ஆடையில் உரையுடன் கூடிய குறுவாள் ஒன்றும் காட்டப்பட்டுள்ளது.

வலது கையை வலது காலின் முட்டி மீது வைத்து கையை தொங்கவிட்டு தனது ஆயுதமான செண்டை பற்றிக் கொண்டும், இடது கையை தொடை மீது வைத்து உள்ளார்.

விஷ்ணு சிற்பம்

 இடது காலின் அருகே அய்யனாரின் வாகனமான குதிரை காட்சி படுத்தப்பட்டு உள்ளது. மேலும் இடது பக்கம் குத்துவிளக்கு ஒன்றும் காணப்படுகிறது. இதன் தலைபகுதி லிங்கம் போன்ற அமைப்பில் உள்ளது. சிற்ப அமைதி மற்றும் அணிகலன்களை வைத்துப் பார்க்கையில் இச்சிற்பம் 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால பல்லவர்கள் காலத்தியது என்று கருதலாம். 1200 ஆண்டு பழமையான இச்சிற்பம் பல வருடங்களாக மண்ணில் சாய்ந்தே கிடப்பதால் வெயிலுக்கும், மழைக்கும் நனைந்து சிலையின் மேற்பரப்பு மிகவும் தேய்ந்த நிலையில் காணப்படுகிறது.

மேலும் இவ்வூரில் பாதி உடைந்த நிலையில் சங்கு சக்கரம் ஏந்திய விஷ்ணு சிற்பம் ஒன்று பெரியகுப்பம் செல்லும் வழியில் இருப்பதும் கண்டறியப்பட்டது. இது பிற்கால விஜயநகர கலை பாணியில் அமைந்துள்ளது. 
இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்