காட்டாற்று ஓடை கரை உடைந்து விளைநிலங்கள் நாசமாகின

தேனி அருகே மழை வெள்ளத்தால் காட்டாற்று ஓடை கரை உடைந்து தண்ணீர் புகுந்ததால் விளைநிலங்கள் நாசமாகின.

Update: 2021-10-05 17:11 GMT
தேனி: 

தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இப்பகுதிகளில் கடந்த 3-ந்தேதி விடிய, விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. தேனி அருகே கோபாலபுரத்தில் உள்ள காட்டாற்று ஓடைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் இந்த ஓடையில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. 

இதில் அதே ஊரை சேர்ந்த விவசாயிகள் சுந்தர்ராஜ், ரெங்கசாமி, சீனிவாசன், சுப்புலட்சுமி உள்பட பலரின் விளைநிலங்கள் முழுவதும் மண் மேவியது. மேலும், அந்த நிலத்தில் அமைக்கப்பட்டு இருந்த சொட்டுநீர் பாசன குழாய்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு சேதம் அடைந்தன. பயிர் சேதம் என்றால் கூட மீண்டும் பயிரிட்டு மீண்டு வந்துவிட இயலும். ஆனால், விளைநிலமே நாசமானதால் செய்வதறியாது விவசாயிகள் கலங்கி நிற்கின்றனர். 

இதனால், தங்களின் விளை நிலங்களை பழைய நிலைமைக்கு சீரமைத்துக் கொடுக்க அரசு முன்வர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்னர். 


இதேபோல் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் வயலில் சாய்ந்து கிடக்கிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்