விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை
விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கியது.;
விழுப்புரம்,
வங்கக்கடல் பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனிடையே தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் விழுப்புரத்தில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்த நிலையில் நேற்றும் இந்த மழை நீடித்தது.
விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கோலியனூர், வளவனூர், காணை, நன்னாடு, தோகைப்பாடி, பெரும்பாக்கம், சிந்தாமணி, அய்யூர்அகரம், பிடாகம், சாலைஅகரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நேற்று அதிகாலை 4 மணி முதல் பலத்த மழை பெய்தது. இந்த மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டி தீர்த்தது.
பெருக்கெடுத்து ஓடியது
அதன் பிறகு சிறிது நேரம் மழை ஓய்ந்திருந்த நிலையில் நேற்று காலை 9 மணி முதல் சாரல் மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழை நேற்று மாலை 6 மணி வரை விட்டுவிட்டு தூறிக்கொண்டே இருந்தது. இடையிடையே அவ்வப்போது பலத்த மழையாகவும் வெளுத்து வாங்கியது.
இதனால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீரில் வாகனங்கள் சீரான வேகத்தில் ஊர்ந்து சென்றன. அதுபோல் தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் குளம்போல் தேங்கியது.
குடியிருப்புகளை சூழ்ந்தது
குறிப்பாக விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலை இந்திரா நகரில் தாழ்வான பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சுற்றிலும் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் அப்பகுதி மக்கள், அத்தியாவசிய தேவைக்காக வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கினர். இதேபோல் விழுப்புரம் கம்பன் நகர், மணிநகர் மற்றும் தெளி பகுதியில் உள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சுற்றிலும் தண்ணீர் குளம்போல் தேங்கியதால் அப்பகுதி மக்களும் மிகவும் அவதியடைந்தனர். பலத்த மழையினால் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியதால் அவ்வழியாக செல்ல முடியாமல் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.
ஆறுகளில் தண்ணீர் வரத்து
மாவட்டத்தின் பல இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருவதால் ஏற்கனவே நிரம்பாத ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி அவை நிரம்பி வருகின்றன. அதுபோல் தென்பெண்ணையாறு, மலட்டாறு உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.
மேலும் விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டில் தண்ணீர் ஓடுவதால் அப்பகுதியை சேர்ந்த மக்கள், அங்குள்ள அணைக்கட்டுக்கு சென்று மகிழ்ச்சியுடன் பார்த்து வருகின்றனர்.
பொதுமக்கள் மகிழ்ச்சி
மேலும் விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர், செஞ்சி, மேல்மலையனூர், திண்டிவனம், மயிலம், வானூர், மரக்காணம், ஆரோவில், கோட்டக்குப்பம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இடி- மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த மழையினால் பொதுமக்கள், விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.