4 மாதங்களாக 55 அடியாக நீடிக்கும் மஞ்சளாறு அணை
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடந்த 4 மாதங்களாக மஞ்சளாறு அணை நீர்மட்டம் 55 அடியாக நீடித்து வருகிறது.
தேனி:
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 57 அடி. அணையின் பாதுகாப்பு கருதி 55 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது. அணையின் மூலம் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் சுமார் 5 ஆயிரத்து 230 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றது.
அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டு, கடந்த ஜூன்4-ந்தேதி நீர்மட்டம் 55 அடியை எட்டியது. அதன் பின்பு வினாடிக்கு 20 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து அவ்வப்போது வினாடிக்கு 20 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
இந்த நிலையில் 2 நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீர்வரத்து வினாடிக்கு 90 கனஅடியாக உயர்ந்தது. இதையடுத்து வினாடிக்கு 90 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த 4 மாதங்களாக அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 55 அடியாக நீடித்து வருகிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக வருகிற 15-ந்தேதி திறக்கப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.