ஒகேனக்கல் அருகே பயங்கரம்: கொடுவாளால் வெட்டி பெண் படுகொலை-குடிபோதையில் கணவர் வெறிச்செயல்

ஒகேனக்கல் அருகே குடிபோதையில் கொடுவாளால் மனைவியை வெட்டிக்கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-10-05 15:58 GMT
பென்னாகரம்:
ஒகேனக்கல் அருகே குடிபோதையில் கொடுவாளால் மனைவியை வெட்டிக்கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
தொழிலாளி
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அடுத்த புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கலில் (வயது 55), பாக்குமட்டை விற்பனை செய்யும் தொழிலாளி. இவருடைய மனைவி ஜெரினா (47), மீன் வறுவல் கடைகளுக்கு மீன் வெட்டி கொடுக்கும் வேலை செய்து வந்தார். 
இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களில் 3 மகள்களும் திருமணமாகி வெளியூர்களில் கணவர் குடும்பத்தினருடன் வசித்து வந்தனர். மேலும் கலிலின் மகன் தர்மபுரியில் தனியாக வசித்து வருகிறார்.
இதன்காரணமாக, கணவன்-மனைவி இருவர் மட்டுமே ஒகேனக்கல் புதுப்பேட்டையில் வசித்து வந்தனர். கலிலுக்கு மதுஅருந்தும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். 
கொடுவாளால் வெட்டிக்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் இருந்த கலில், தனது மனைவி ஜெரினாவுடன் சண்டை போட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கலில், வீட்டில் இருந்த கொடுவாளை எடுத்து தனது மனைவியின் தலை மற்றும் கழுத்து பகுதியில் வெட்டி உள்ளார். இதில் அந்த இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் ஜெரினா துடிதுடித்து இறந்தார். 
இதனிடையே கலிலின் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அங்கு அவர்கள் ஜெரினா வெட்டப்பட்டு பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் ஒகேனக்கல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கிருந்த கலிலை கைது செய்தனர்.
பரபரப்பு
மேலும் கொலை செய்யப்பட்ட ஜெரினாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட கலிலிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் மனைவியை கணவரே கொடுவாளால் வெட்டிக்கொன்ற பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்