திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சட்ட உதவி மையம்
திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சட்ட உதவி மையம்;
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் சட்ட உதவி மையம் நேற்று தொடங்கப்பட்டது.
சட்ட உதவி மையம் தொடக்க விழா
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் 25-வது ஆண்டு வெள்ளி விழா ஆண்டை கொண்டாடும் விதமாக தொடர்ச்சியாக 45 நாட்கள் திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றம் மற்றும் தாலுகா நீதிமன்றங்களில் உள்ள சட்டப்பணிகள் அலுவலகங்கள் மூலமாக பல்வேறு பகுதிகளில் கடந்த 2-ந் தேதி முதல் சட்ட விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக நேற்று திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் முன் சட்ட உதவி மையம் தொடக்க விழா நடந்தது. இதனை மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் சொர்ணம் நடராஜன் தொடங்கிவைத்தார்.
ஆலோசனைகள்
இந்த சட்ட உதவி மையம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் ஓர் அங்கமாக செயல்படும். இதில் நாள்தோறும் சட்ட உதவி மையத்தின் பட்டியல் வக்கீல்கள் ஒருவர் பங்கேற்று, வருகிற மனுக்களை பரிசீலித்து சட்ட ஆலோசனைகள் வழங்குவார். எனவே ஏழை, எளிய மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே காங்கேயம், அவினாசி, பல்லடம், ஊத்துக்குளி, மடத்துக்குளம், உடுமலை, தாராபுரம் போன்ற தாலுகாக்களில் சட்ட விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்றது. இந்த முகாமில் 296 மனுக்கள் பெறப்பட்டது.
இதுபோல் பொதுமக்களுக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட முதன்மை நீதிபதி சொர்ணம் நடராஜன் வெளியிட்டார். விழாவில் பலர் கலந்துகொண்டனர்.