தொப்பூர் கணவாயில் அடுத்தடுத்து 2 லாரிகள் கவிழ்ந்து விபத்து-3 டிரைவர்கள் காயம்

தொப்பூர் கணவாயில் அடுத்தடுத்து 2 லாரிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 3 டிரைவர்கள் காயம் அடைந்தனர்.

Update: 2021-10-05 14:41 GMT
நல்லம்பள்ளி:
தொப்பூர் கணவாயில் அடுத்தடுத்து 2 லாரிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 3 டிரைவர்கள் காயம் அடைந்தனர்.
லாரி கவிழ்ந்தது
மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து காங்கேயத்திற்கு நெல் பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி, நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக வந்தது. லாரியை அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜி (வயது 25) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் மாற்று டிரைவராக அதே மாவட்டத்தை சேர்ந்த தனவேல் (25) உடன் வந்தார்.
தொப்பூர் கணவாய் கட்டமேடு 2-வது வளைவில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த நெல் பார லாரி, தாறுமாறாக ஓடி சாலையோரம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 
இந்த விபத்தில் 2 டிரைவர்களும் காயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் ஒன்றிணைந்து விபத்தில் சிக்கி காயம் அடைந்த டிரைவர்கள் ராஜி, தனவேல் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மற்றொரு விபத்து
இந்த விபத்து நடந்து அடுத்த 2 மணி நேரத்திற்கு பிறகு, ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு இரும்பு காயில் உருளை பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி, தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக வந்தது. லாரியை பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்லுகுமார்சிங் (30) என்பவர் ஓட்டி வந்தார்.
தொப்பூர் கணவாயில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த இரும்பு காயில் பார லாரி சாலையில் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் கிடந்த ராட்சத கிரானைட் கல் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லாரியில் இருந்த காயில் உருளை பாரங்கள் சாலையில் விழுந்ததில், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக போலீசார் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த 2 விபத்துகளால் தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த விபத்துகள் குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்