பைக்காராவில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு
பைக்காராவில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு
ஊட்டி
பைக்காராவில் சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்துவதால், அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. சுற்றுலா பயணிகளுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
போக்குவரத்து பாதிப்பு
நீலகிரி மாவட்டம் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது. வார நாட்களை விட வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. ஊட்டி அருகே தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பைக்காரா படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர். மேலும் பைக்காரா நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரை கண்டு ரசிக்கின்றனர். இயற்கை அழகு பின்னணியில் புகைப்படம் எடுத்து கொள்கின்றனர். இங்கு வெளி மாநில, பிற மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகஅளவில் வருகின்றனர்.
அவர்கள் ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை பைக்காரா பகுதியில் சாலையின் இருபுறத்திலும் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். பைக்காராவில் இருந்து நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் கட்டணம் முறையில் 2 பேட்டரி கார்கள் அல்லது நடந்து நீர்வீழ்ச்சிக்கு சென்று வருகின்றனர். பைக்காராவில் சாலையின் இருபுறமும் நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. இதனால் எதிரே வரும் அரசு பஸ்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் செல்ல முடியாமல் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
வாகன நிறுத்துமிடம்
இதுகுறித்து வாகன ஓட்டுனர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூறியதாவது:- பைக்காரா நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. இதனால் அங்கு வாகனங்களை நிறுத்த இடம் இல்லாததால், சாலையோரம் நிறுத்தி விட்டு செல்கிறோம். இருபுறமும் நிறுத்துவதால், சாலையில் செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்ட வாகனங்களை உரசியபடி செல்கிறது. சில நேரங்களில் சுற்றுலா பயணிகள் சிறு காயங்களுடன் தப்பி உள்ளனர். இதே சாலையில் உள்ள சூட்டிங்மட்டம் சுற்றுலாத்தலம் அருகே வாகனங்களை நிறுத்த தனியாக இடவசதி உள்ளது.
அதேபோல் நீர்வீழ்ச்சிக்கு வரும் சுற்றுலா வாகனங்களை நிறுத்த வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் சீசன் காலங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க முடியும். மேலும் விபத்து ஏற்படுவதை தவிர்க்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.