தம்பியை அரிவாளால் வெட்டிய அண்ணனுக்கு ஒரு ஆண்டு சிறை

தம்பியை அரிவாளால் வெட்டிய அண்ணனுக்கு ஒரு ஆண்டு சிறை

Update: 2021-10-05 13:48 GMT
கூடலூர்

அய்யங்கொல்லியில் நிலத்தகராறு காரணமாக தம்பியை அரிவாளால் வெட்டிய அண்ணனுக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து கூடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தம்பிக்கு அரிவாள் வெட்டு

பந்தலூர் தாலுகா அய்யங்கொல்லியை சேர்ந்தவர் குரியாகோஸ். இவரது மகன்கள் தாமஸ், வர்கீஸ். அண்ணன், தம்பியான இவர்கள் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. கடந்த 26.12.2008 அன்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தாமஸ், அரிவாளை எடுத்து வர்கீசை வெட்டினார்.
இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் பந்தலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் சேரம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பியை அரிவாளால் வெட்டிய தாமசை கைது செய்தனர்.

அண்ணனுக்கு சிறை தண்டனை

இதுதொடர்பான வழக்கு கூடலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது அரசு தரப்பில் சாட்சியம் அளிக்க போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த கிருஷ்ணசாமி நீதிமன்றத்துக்கு வராமல் இருந்து வந்தார். தற்போது அவர் திருப்பூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். இதைத்தொடர்ந்து அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்தது. இதன் காரணமாக நீதிமன்றத்தில் ஆஜராகி கிருஷ்ணசாமி சாட்சியம் அளித்தார். 
இந்த வழக்கு நேற்று நீதிபதி வேங்கட சுப்பிரமணியன் தலைமையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தீர்ப்பு கூறினார். அதில், தம்பியை அரிவாளால் வெட்டிய தாமசுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்