தூத்துக்குடி மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் சட்டத்துக்கு உட்பட்டு கருக்கலைப்பு செய்ய அணுகலாம் கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
தூத்துக்குடி மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் சட்டத்துக்கு உட்பட்டு கருக்கலைப்பு செய்ய அணுகலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டத்துக்கு உட்பட்டு பாதுகாப்பான கருக்கலைப்பு செய்ய அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகலாம் என கலெக்டர் ெசந்தில்ராஜ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நவீன மாத்திரைகள்
தமிழகத்தில் நடக்கும் மகப்பேறு இறப்புகளில் 8 சதவீதம் பாதுகாக்கப்படாத கருக்கலைப்பு மூலமாகவே நடக்கிறது. இதை தடுக்கும் வகையில் எளிய நவீன கருக்கலைப்பு மாத்திரைகள் உள்ளன. இது சிறந்த பாதுகாப்பான கருக்கலைப்பு முறை ஆகும். இதனை 7 வாரங்களுக்கு உட்பட்ட கர்ப்பத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். டாக்டர்களின் ஆலோசனை மற்றும் பரிசோதனைக்கு உட்பட்டு கருக்கலைப்பு மாத்திரைகள் வழங்கப்படும்.
கருக்கலைப்பு
அதே போல் உறிஞ்சி குழாய் வழியாக கருப்பையில் உள்ள கர்ப்பத்தை உறிஞ்சியும் கருக்கலைப்பு செய்யப்படும். 6 முதல் 8 வார கர்ப்பங்களை ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 8 முதல் 12 வார கர்ப்பங்களை அரசு மருத்துவமனைகளிலும் கலைக்கலாம். இந்த கருக்கலைப்பு நம்பகத்தன்மையுடன் சட்டத்துக்கு உட்பட்டு இலவசமாக செய்யப்படுகிறது.கருக்கலைப்பு செய்து கொண்டவர்களின் விவரங்கள் பாதுகாக்கப்படும். மேலும் விவரங்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளை அணுகலாம். கருக்கலைப்பு சம்பந்தமான புகார்களை 99522 33131 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
ஆன்லைன் மூலம் பயிற்சி
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட குடும்பநலத் துறை சார்பில் பாதுகாப்பான கருக்கலைப்பு குறித்து ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.