மன்னார் வளைகுடாவில் இருக்கும் குட்டித்தீவுகளை பாதுகாக்க வேண்டும் கூடுதல் முதன்மை தலைைம வன பாதுகாவலர் வேண்டுகோள்
மன்னார் வளைகுடாவில் இருக்கும் குட்டித்தீவுகளை பாதுகாக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு கூடுதல் முதன்மை தலைைம வன பாதுகாவலர் வேண்டுகோள் விடுத்தார்
தூத்துக்குடி:
மன்னார் வளைகுடாவில் இருக்கும் குட்டித்தீவுகளை பாதுகாக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு கூடுதல் முதன்மை தலைைம வன பாதுகாவலர் வேண்டுகோள் விடுத்தார்.
வனஉயிரின வாரவிழா
தூத்துக்குடி மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறை சார்பில் வனஉயிரின வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவை முன்னிட்டு கடலுக்கு அடியில் உள்ள கடல் சார்ந்த உயிரினங்களின் சூழல் அமைப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி தூத்துக்குடி அருகே உள்ள வான்தீவில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் அபிஷேக் டோமர் தலைமை தாங்கினார். களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் வன பாதுகாவலர் மற்றும் கள இயக்குனர் செந்தில்குமார், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சென்னை கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் ஆகாஷ் தீப் பரூவா கலந்து கொண்டு கடல்வாழ் உயிரினங்களின் முக்கியத்துவம், கடல் வளம் காப்பதில் இளைஞர்களின் பங்கு குறித்து விளக்கி கூறினார்.
ஸ்குபா டைவிங்
தொடர்ந்து சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிலையம் சார்பில், கல்லூரி மாணவர்களுக்கு ஸ்குபா டைவிங் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர் மாணவர்கள் வான்தீவு அருகே கடல் நீருக்குள் மூழ்கி பவளப்பாறைகளை பார்வையிட்டனர்.
அந்த பவளப்பாறைகள் மூலம் அங்கு வாழும் கடல் அட்டை, கடல் புற்கள், கடல் தாமரை, வண்ண மீன்கள், கடல்பாசி, நட்சத்திர மீன்கள், சங்குகள் உள்ளிட்ட பல்வேறு வகையான உயிரினங்களை பார்வையிட்டனர். இதனை பாதுகாப்பது தொடர்பாக அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியை முன்னிட்டு தீவு பகுதியில் சுத்தம் செய்யும் பணிகளும் நடந்தன. மரக்கன்றுகளும் நடப்பட்டன. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக் கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
விழிப்புணர்வு இல்லை
இதையடுத்து கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் ஆகாஷ் தீப் பரூவா நிருபர்களிடம் கூறியதாவது:-
வன உயிரின வாரவிழா 4-வது நாள் நிகழ்ச்சி வான்தீவில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பொதுவாக வனத்துறை என்றால், காடுகளில் உள்ள புலி, யானைகள் பற்றி மட்டுமே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதனை தவிர்த்து கடலுக்கு அடியில் உள்ள வன உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டும். இது தொடர்பாக பெரிய அளவில் விழிப்புணர்வு இல்லை. இதனால் மாணவர்கள் நேரடியாக கடலுக்கு அடியில் உள்ள உயிரினங்களை பார்க்கும்போது, விழிப்புணர்வு ஏற்படும். ஆகையால் இந்த தீவு பகுதியில் உள்ள வன உயிரினங்கள், பவளப்பாறைகளை மாணவர்கள் பார்வையிட்டு உள்ளனர். அதனை பாதுகாப்பது குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறப்பட்டு உள்ளது.
பாதுகாக்க வேண்டும்
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வான் தீவு சுமார் 22 எக்டேர் பரப்பு கொண்டதாக இருந்தது. ஆனால் தற்போது பல்வேறு காரணங்களால் தீவு பகுதி மிகவும் சுருங்கி 1½ எக்டேர் பரப்பாக குறைந்து உள்ளது. இது போன்று மன்னார் வளைகுடா பகுதியில் பல குட்டித்தீவுகள் கடலில் உள்ளன. இந்த குட்டித்தீவுகளை இளைஞர்களும், மாணவர்களும் இணைந்து பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனசரக அலுவலர் ரா.ரகுவரன் தலைமையில் வனவர்கள் அருண்குமார், மதனகுமார், ராஜ்குமார், அஸ்வின், வனக் காப்பாளர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் செய்திருந்தனர்.