தென்திருப்பேரை அருகே காரில் கஞ்சா கடத்திய 3பேர் கைது
தென்திருப்பேரை அருகே காரில் கஞ்சா கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்
தென்திருப்பேரை:
தென்திருப்பேரை அருகே காரில் 8 கிலோ கஞ்சா கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
போலீசார் சோதனை
தென்திருப்பேரை அருகே உள்ள கேம்பலாபாத் நெல்லை - திருச்செந்தூர் மெயின் ரோட்டில் ஆழ்வார்திருநகரி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லெட்சுமி பிரபா தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த சொகுசு கார் ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாரை பார்த்தவுடன் காரில் இருந்த 2 பேர் தப்பி ஓடினர்.
8 கிலோ கஞ்சா சிக்கியது
போலீசார் காரை சுற்றிவளைத்து நின்றவாறு, மீதமிருந்த 3 பேரை மடக்கி பிடித்தனர். காரில் போலீசார் சோதனை செய்ததில், 8 கிலோ கஞ்சாவும், ரூ.40 ஆயிரமும் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை ஆழ்வார்திருநகரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
3 பேர் கைது
விசாரணையில் காரில் இருந்தவர்கள் ஸ்ரீவைகுண்டம் கீழ கோட்வாசல் தெருவை சேர்ந்தவர்களான மந்திரமூர்த்தி மகன் சங்கரன் (எ) சங்கரசுப்பு (வயது 26), மாரிமுத்து மகன் ராமசாமி (26), பரமசிவம் மகன் நம்பி கணேஷ் (27) என்று தெரிந்தது. காரில் இருந்து தப்பி ஓடியவர்கள் ஆழ்வார்திருநகரி பரதர் தெருவை சேர்ந்த அய்யாத்துரை மகன் மாரிமுத்து, ஸ்ரீவைகுண்டம் வெள்ளூரை சேர்ந்த ராஜா (எ) ராசையா மகன் பாலமுருகன் என்று தெரிய வந்தது. இது தொடர்பாக ஆழ்வார்திருநகரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரன் உள்பட 3 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய அய்யாத்துரை உள்ளிட்ட 2 பேரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.