1½ ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்: மாற்றுத்திறனாளிக்கு சக்கரநாற்காலி வழங்கி வாகனத்தில் அனுப்பி வைத்த கலெக்டர்-மனு அளித்த உடனே நடவடிக்கை

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் 1½ ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மனு அளித்த சிறிது நேரத்தில் மாற்றுத்திறனாளிக்கு சக்கரநாற்காலியை வழங்கிய கலெக்டர், சிறப்பு வாகனத்தில் சொந்த ஊருக்கும் அனுப்பி வைத்து நடவடிக்கை எடுத்தார்.

Update: 2021-10-04 23:25 GMT
சேலம்:
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் 1½ ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மனு அளித்த சிறிது நேரத்தில்  மாற்றுத்திறனாளிக்கு சக்கரநாற்காலியை வழங்கிய கலெக்டர், சிறப்பு வாகனத்தில் சொந்த ஊருக்கும் அனுப்பி வைத்து நடவடிக்கை எடுத்தார்.
குறைதீர்க்கும் கூட்டம்
தமிழகத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை கொரோனா வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி நடத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 1½ ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முதன் முதலாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். பின்னர் அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அதன் மீது உடனடி தீர்வு காண வேண்டும் என்று கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார். இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஒரேநாளில் 367 மனுக்கள் பெறப்பட்டன.
இதனை தொடர்ந்து, 14 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.9 லட்சத்து 36 ஆயிரத்து 400 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.
இக்கூட்டத்தில் உதவி கலெக்டர் (பயிற்சி) முகமது சபீர் ஆலம், சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் சத்திய பால கங்காதரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார், வேளாண்மை இணை இயக்குனர் கணேசன், கலால் உதவி ஆணையர் தனலிங்கம், ஊராட்சிகள் உதவி இயக்குனர் மணிவாசகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலி
முன்னதாக காடையாம்பட்டி அருகே டேனிஸ்பேட்டை பகுதியை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மாற்றுத்திறனாளி மகன் வரதராஜ் சக்கரநாற்காலி கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தார். அவருக்கு பிறவி குறைபாடு காரணமாக 100 சதவீதம் கை, கால்கள் பாதிக்கப்பட்டு இருந்தன. அவரின் நிலையை அறிந்த  கலெக்டர், உடனடியாக நடவடிக்கை எடுத்து ரூ.6 ஆயிரத்து 400 மதிப்புள்ள சிறப்பு வகை சக்கர நாற்காலியை மாற்றுத்திறனாளி வரதராஜிடம் வழங்கினார்.
 பின்னர் அந்த சக்கர நாற்காலியில் மாற்றுத்திறனாளியை கலெக்டர் கார்மேகம் தூக்கி வைத்து சிறிது தூரம் தள்ளி சென்றார். இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பணியாளர்கள் சிறப்பு வாகனத்தில் அவரை ஏற்றி வீட்டிற்கு சக்கர நாற்காலியுடன் அனுப்பி வைத்தனர். மாற்றுத்திறனாளிக்கு கலெக்டர் கார்மேகம் செய்த உதவியை அங்கிருந்தவர்கள் பார்த்து நெகிழ்ச்சி அடைந்தனர். மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்த சிறிது நேரத்தில் சக்கர நாற்காலியை வழங்கி நடவடிக்கை எடுத்ததால் கலெக்டருக்கு ராமலிங்கம் நன்றி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்