700 மதுபாட்டில்கள் பறிமுதல்; 2 வாலிபர்கள் கைது
700 மதுபாட்டில்கள் பறிமுதல்; 2 வாலிபர்கள் கைது
ஆண்டிமடம்:
மதுபாட்டில்கள் பதுக்கல்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள வரதராஜன்பேட்டையை சேர்ந்த சிலர் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தனிப்பிரிவு மற்றும் ஆண்டிமடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான ஒரு வீட்டில் திடீரென சோதனையிட்டபோது அந்த வீட்டின் பின்புறம் 700 மதுபான பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், மது பாட்டில்களை பறிமுதல் செய்து, 2 பேரை பிடித்து ஆண்டிமடம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரித்தனர்.
2 பேர் கைது
இதில் அவர்கள், வரதராஜன்பேட்டை கொழை பகுதியில் வசிக்கும் ராயப்பன் மகன் சுரேஷ்(வயது 30), செம்மண் பள்ளம் பகுதியில் வசிக்கும் பவுள்ராஜ் மகன் ஆல்வின் (22) என்பதும், ஒருவரது வீட்டின் பின்புறம் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுங்கி வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் மீது அரியலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மது விற்பனை மூலம் கிடைத்த ஆயிரத்து 500 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.