ஆற்றங்கரையோரம் தவறி விழுந்த சிறுவன் பலி
பூதப்பாண்டியில் ஆற்றங்கரையோரம் தவறி விழுந்த சிறுவன் பரிதாபமாக இறந்தான்.;
பூதப்பாண்டியில் ஆற்றங்கரையோரம் தவறி விழுந்த சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
3-ம் வகுப்பு மாணவன்
ஆரல்வாய்மொழி மிஷன் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் தேவராஜன், விவசாயி. இவரது மனைவி சீதாலட்சுமி. இவர்களுக்கு தங்கசுகின் (வயது 8) என்ற மகனும், தனு வர்ஷினி ( 4) என்ற மகளும் இருந்தனர். சிறுவன் தங்கசுகின் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்த நிலையில் தேவராஜன் நேற்று ஆதார் கார்டில் செல்போன் எண்ணை சேர்ப்பதற்காக தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து கொண்டு பூதப்பாண்டியில் உள்ள தோவாளை தாலுகா அலுவலகத்துக்கு சென்றார்.
சாவு
அப்போது குழந்தைகள் இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என கூறினர். இதற்காக தேவராஜ் அவர்களை தாலுகா அலுவலகம் அருகே உள்ள பழைய ஆற்றின் கரையோரம் அழைத்து சென்றார். பின்னர், ஆற்றின்கரையோரம் குழந்தைகளை விட்டுவிட்டு தண்ணீர் பிடிப்பதற்காக மீண்டும் தாலுகா அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது சிறுவன் தங்கசுஜின் ஆற்றில் இறங்கியதாக தெரிகிறது. கால்தடுமாறி கரையோரம் இருந்த பாறைகல் மீது விழுந்துள்ளான். இதில் தலையில் அடிபட்டு தண்ணீரில் மூழ்கிய நிலையில் மயங்கி கிடந்தான்.
தேவராஜ் தண்ணீர் பிடித்துவிட்டு திரும்ப சென்ற போது சிறுவன் தண்ணீர் ஓரம் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே, மகனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
போலீசார் விசாரணை
அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார், சிறுவனின் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.