சொத்துவரியை 15-ந்தேதிக்குள் செலுத்துவோருக்கு ஊக்கத்தொகை: மாநகராட்சி கமிஷனர்

சென்னையில் சொத்துவரியை 15-ந்தேதிக்குள் செலுத்துவோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி அறிவித்துள்ளார்.

Update: 2021-10-04 09:44 GMT
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சொத்து வரி

2021-2022-ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் பெருநகர சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை மூலமாக சொத்துவரி ரூ.375.59 கோடி மற்றும் தொழில் வரியாக ரூ.225.13 கோடி என மொத்தம் ரூ.600.72 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. முந்தைய நிதியாண்டின் முதல் அரையாண்டில் (I/2020-2021) சொத்துவரியில் ரூ.156.41 கோடியும், தொழில்வரியில் ரூ.225.89 கோடியும் என மொத்தம் ரூ.382.30 கோடி வரிவசூல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 5 நிதி ஆண்டுகளின் முதல் அரையாண்டு சொத்துவரி வசூலினை ஒப்பிடும்போது, இந்த நிதி ஆண்டில் அதிகபட்சமாக வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரியினை சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டத்தின்படி 2-ம் அரையாண்டின் முதல் 15 தினங்களுக்குள், அதாவது அக்டோபர் 1-ந்தேதி முதல் 15-ந்தேதிக்குள் செலுத்தி, சொத்துவரியில் ஊக்கத்தொகையாக 5 சதவீதம், அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை பெற்று பயன் அடையலாம்.

ஊக்கத்தொகை

சொத்துவரியை 15-ந்தேதிக்கு பிறகு செலுத்தும் பட்சத்தில், செலுத்த வேண்டிய தொகையுடன் ஆண்டுக்கு 2 சதவீதம் தனிவட்டி சேர்த்து செலுத்தப்பட வேண்டும். 2021 ஏப்ரல் மாதத்தில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 294 சொத்து உரிமையாளர்ளும், 2020 அக்டோபரில் 94 ஆயிரத்து 900 சொத்து உரிமையாளர்ளும் குறிப்பிட்ட காலத்துக்குள் சொத்துவரி செலுத்தி ஊக்கத்தொகை பெற்று பயனடைந்துள்ளனர்.

இந்தநிலையில், சொத்து உரிமையாளர்கள் சொத்துவரி செலுத்தி ஊக்கத்தொகை பெற சென்னை மாநகராட்சி பல்வேறு முறைகளில் சொத்து உரிமையாளர்களிடையே விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஏற்படுத்தி வருகிறது.

எனவே, சொத்து உரிமையாளர்கள் www.chennaicorporation.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், சென்னை மாநகராட்சி மண்டலம் அல்லது கோட்ட அலுவலகங்களில் அமைந்துள்ள அனைத்து இ-சேவை மையங்களின் முகப்புகளில், வரி வசூலிப்பாளர்களின் கையடக்க கருவி மூலமும், செல்போன் செயலியை பயன்படுத்தியும் சொத்துவரியை அக்டோபர் 15-ந்தேதிக்குள் செலுத்தி ஊக்கத்தொகை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்