ரேபிஸ் வைரசுக்கு கல்லூரி மாணவி பலி
கடபா அருகே ரேபிஸ் வைரசுக்கு கல்லூரி மாணவி ஒருவர் பலியாகியுள்ளார்.;
மங்களூரு: கடபா அருகே ரேபிஸ் வைரசுக்கு கல்லூரி மாணவி ஒருவர் பலியாகியுள்ளார்.
கல்லூரி மாணவி
தட்சிண கன்னடா மாவட்டம் கடபா தாலுகா அலங்கார் கிராமத்தை சேர்ந்தவர் வின்சி சாரம்மா(வயது 17) இவர், கடபாவில் உள்ள அரசு கல்லூரியில் பி.யு.சி 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 30-ந்தேதி வின்சிக்கு தலைவலி, திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து வின்சியை, பெற்றோர் அலங்கார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். ஆனாலும் வின்சிக்கு உடல்நலம் குணமாகவில்லை. இதையடுத்து வின்சியை, புத்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வின்சி மங்களூரு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
ரேபிஸ் வைரசுக்கு பலி
அங்கு வின்சிக்கு, டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர். அதில் வின்சி, ரேபிஸ் வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் வின்சிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு வின்சி பரிதாபமாக உயிரிழந்தார். இதையறிந்த பெற்றோர்கள் கதறி அழுதனர். பின்னர் மாணவியின் உடல் பிேரத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
வளர்ப்பு நாய் மூலம்...
இதுபற்றி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ரேபிஸ் வைரசுக்கு பலியான வின்சி வீட்டில் வளர்ப்பு நாய் ஒன்று வளர்க்கப்பட்டு வந்துள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வளர்ப்பு நாய் ரேபிஸ் வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது. அதாவது அலங்கார் பகுதியில் உள்ள தெருநாய்களிடம் இருந்து வின்சியின் வளர்ப்பு நாய்க்கு ரேபிஸ் வைரஸ் தாக்கியுள்ளது. இதனால் வளர்ப்பு நாய் மூலம் மாணவி வின்சிக்கு ரேபிஸ் வைரஸ் தாக்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம் என்றனர்.