வரதட்சணை கொடுமை; விஷம் கொடுத்து பெண் கொலை

சிகாரிப்புரா அருகே வரதட்சணை கொடுமைப்படுத்தி பெண்ணை விஷம் கொடுத்து கொன்ற கணவர், மாமியார் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-10-03 21:26 GMT
சிவமொக்கா: சிகாரிப்புரா அருகே வரதட்சணை கொடுமைப்படுத்தி பெண்ணை விஷம் கொடுத்து கொன்ற கணவர், மாமியார் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வரதட்சணை கொடுமை

சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தாலுகா கல்லாப்புரா கிராமத்தை சேர்ந்தவர் லதா. லதாவுக்கு, கெங்கட்டே கிராமத்தை சேர்ந்த கெங்கப்பா என்பவருடன் 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கெங்கப்பா, லதாவிடம் கூடுதல் வரதட்சணை வாங்கிவரும்படி கூறியுள்ளார். ஆனால் வரதட்சணை வாங்கிவர லதா மறுத்துவிட்டார். இதனால் கெங்கப்பாவுக்கும், லதாவுக்கு தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இதனால் லதா கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். சிறிது நாட்களில் தாய் ரத்னா, லதாவிடம் அறிவுரை கூறி கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் கெங்கப்பா, தினமும் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து வரதட்சணைகேட்டு லதாவை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார்.

விஷம் கொடுத்து கொலை

இதற்கு கெங்கப்பாவின் தாய் பத்மா, சகோதரி கங்கம்மாவும் உடந்தையாக இருந்துள்ளனர். அதன்படி கடந்த மாதம் (செப்டம்பர்) 26-ந் தேதி கெங்கப்பா, அவரது தாய், சகோதரி ஆகிய 3 பேரும் வரதட்சணை கேட்டு லதாவுடன் தகராறு செய்துள்ளனர். 

அப்போது 3 பேரும் சேர்ந்து லதாவின் கை, கால்களை பிடித்து வாயில் விஷமருந்து ஊற்றியுள்ளனர். விஷம் குடித்த லதா மயங்கி விழுந்தார். இதுபற்றி தகவல் அறிந்த அப்பகுதியினர் லதாவை மீட்டு சிகாரிப்புரா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். லதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் கடந்த 30-ந்தேதி சிகிச்சை பலனின்றி லதா உயிரிழந்தார். 

போலீசார் விசாரணை

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் லதாவின் தாய் ரத்னா, சிகாரிப்புரா போலீசில் தனது மகளை வரதட்சணை கொடுமைப்படுத்தி அவரது கணவர், மாமியார், நாத்தனார் ஆகிய பேரும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டதாகவும், அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் லதாவின் கணவர் ெகங்கப்பா, அவரது தாய் பத்மா, சகோதரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்