கார் - மொபட் மோதல்; வாலிபர் பலி

கார் - மொபட் மோதியதில் வாலிபர் இறந்தார்.

Update: 2021-10-03 20:23 GMT
ஆண்டிமடம்:

துக்க நிகழ்ச்சிக்கு வந்தார்
கடலூர் மாவட்டம் வாலீஸ்பேட்டை கிராமத்தை சேர்ந்த ஜான்பீட்டரின் மகன் நெப்போலியன்(வயது 23). இவர் ஐ.டி.ஐ. படித்துவிட்டு வேலை தேடி வருகிறார். இவர் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள அகிேணஸ்புரம் கிராமத்தில் தனது பாட்டி இறந்த துக்க நிகழ்ச்சிக்கு வந்தார். அப்போது அகிணேஸ்புரத்தில் இருந்து ஆண்டிமடம் கடைவீதிக்கு வந்து அவருக்குத் தேவையான சில பொருட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் துக்க வீட்டுக்கு தனது மொபட்டில் சென்றார்.
அப்போது கும்பகோணத்தில் இருந்து சென்னை நோக்கி கார் ஒன்று வேகமாக வந்துள்ளது. ஆண்டிமடம் - ஜெயங்கொண்டம் சாலையில் கூவத்தூர் அகிணேஸ்புரம் பிரிவு சாலை அருகே வந்தபோது காரும், மொபட்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
சாவு
இதில் நெப்போலியன் தூக்கி வீசப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த ஆண்டிமடம் போலீசார், நெப்போலியனின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த வாலிபர் விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்