ஈரோட்டில் பெட்ரோல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் விரக்தி

ஈரோட்டில் பெட்ரோல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் விரக்தியடைந்துள்ளனா்.

Update: 2021-10-02 21:27 GMT
ஈரோடு
ஈரோட்டில் கடந்த ஆகஸ்டு மாதம் 12-ந்தேதி பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 102.49 ரூபாயாகவும், டீசல் விலை ஒரு லிட்டர் 94.39 ரூபாயாகவும் இருந்தது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3 விலை குறைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதால், 99.49 ரூபாயாக குறைந்தது. இதைத்தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்தது.
கடந்த மாதம் 27-ந் தேதி ஒரு லிட்டர் 99.39 ரூபாயாக இருந்த பெட்ரோல் 29-ந் தேதி 18 காசுகள் உயர்ந்து 99.57 ரூபாயாக உயர்ந்தது. இதேபோல் ஒரு லிட்டர் டீசல் கடந்த 27-ந் தேதி 94.39 ரூபாயில் இருந்து 29-ந்தேதி 24 காசுகள் உயர்ந்து 94.62 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 30-ந்தேதி 50 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் 100.07 ரூபாயானது. டீசல் லிட்டருக்கு 62 காசுகள் உயர்ந்து 95.24 ரூபாயானது.
இந்த நிலையில் நேற்று பெட்ரோல் விலை 21 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் 100.28 ரூபாய்க்கும், டீசல் 28 காசுகள் உயர்ந்து 95.52 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. பெட்ரோல் விலை, 100 ரூபாயை தாண்டி உள்ள நிலையில் விரைவில் டீசல் விலையும் 100 ரூபாயை தொடும் நிலைக்கு வந்துள்ளதால், அனைத்து வகையான வாகன ஓட்டிகளும் விரக்தி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்