காந்தி ஜெயந்தியன்று மதுபானம் விற்ற 18 பேர் மீது வழக்கு
காந்தி ஜெயந்தியன்று கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்த 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.1.56 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
புதுச்சேரி, அக்.3-
காந்தி ஜெயந்தியன்று கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்த 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.1.56 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
தீவிர ரோந்து
புதுச்சேரி மாநிலத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து மதுபானம், கள், சாராயக்கடைகளை மூடவேண்டும் என கலால்துறை அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று அனைத்து மதுபானம், கள், சாராயக்கடைகள் மூடப்பட்டு இருந்தன.
இந்தநிலையில் புதுச்சேரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கள்ளத்தனமாக மதுபானம், சாராயம் விற்பனையை கண்காணிக்க கலால்துறை சார்பில் 3 பறக்கும்படை அமைக்கப்பட்டது. பறக்கும் படை அதிகாரிகள் புதுச்சேரி நகரம் மற்றும் பாகூர், வில்லியனூர், திருக்கனூர், திருபுவனை, தவளக்குப்பம், காட்டேரிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
ரூ.1.56 லட்சம் அபராதம்
அப்போது பல்வேறு இடங்களில் கள்ளத்தனமாக மதுபானம், சாராயம் விற்பனை செய்த 18 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவரிகளிடம் இருந்து 175 லிட்டர் மதுபானங்கள், 64 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும்.
மேலும் கள்ளத்தனமாக மது விற்பனை செய்தவர்களுக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 56 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.