வாகனங்களில் பொருத்திய பம்பர்கள், கொடிகள் அகற்றம்
ஊட்டியில் விதிமுறைகளை மீறி வாகனங்களில் பொருத்திய பம்பர்கள், கொடிகளை அகற்றி வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை எடுத்தார்.
ஊட்டி
ஊட்டியில் விதிமுறைகளை மீறி வாகனங்களில் பொருத்திய பம்பர்கள், கொடிகளை அகற்றி வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை எடுத்தார்.
புதிய விதிமுறைகள் அமல்
தமிழகத்தில் அரசியல் கட்சி சார்ந்தவர்கள் அல்லது மற்ற அமைப்பை சார்ந்தவர்கள் தங்களது சொந்த வாகனங்களில் கட்சி கொடிகள், பெயர் பலகை ஆகியவற்றை பொருத்தி இருந்தால் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். அதிக அளவு சத்தம் எழுப்பக்கூடிய ஒலிப்பான்கள், சைலன்சர்கள் போன்ற மாற்றங்களை வாகனங்களில் செய்யக்கூடாது உள்ளிட்ட மோட்டார் வாகன விதிமுறைகள் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை தீர்ப்பின்படி கொண்டு வரப்பட்டது.
இந்த புதிய விதிமுறைகள் நீலகிரி மாவட்டத்தில் நேற்று முதல் அமலுக்கு வந்தது. ஊட்டி சேரிங்கிராஸ் சந்திப்பில் வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், ஊட்டி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர்.
போலீசார் சோதனை
அப்போது வாகனங்களில் மோட்டார் வாகன சட்ட விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா? என்று சோதனை செய்தனர். அதில் பிற மாவட்டங்களில் இருந்து ஊட்டிக்கு வந்த சுற்றுலா வந்த வாகனங்களில் கட்சி கொடிகள், பம்பர்கள், அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலிப்பான்கள், கண் கூசும் தன்மை கொண்ட அதிக வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள் போன்றவை இருந்தது தெரியவந்தது.
அந்த வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி கட்சி கொடிகள், பம்பர்கள், ஒலிப்பான்கள் போன்றவற்றை அகற்றினர். மேலும் ஆட்டோக்களின் முன்பகுதியில் விதியை மீறி பம்பர்கள் பொருத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே பம்பர்கள் அப்புறப்படுத்தப்பட்டன.
43 பேர் மீது வழக்கு
இது தவிர வாகனங்களில் இடது, வலது பக்கம் உள்ள ஜன்னல் கண்ணாடிகள் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். ஊட்டியில் நேற்று மோட்டார் வாகன சட்ட விதியின்படி 40-க்கும் மேற்பட்ட வாகனங்களில் இருந்து கட்சி கொடிகள், ஒலிப்பான்கள், பம்பர்கள் போன்றவற்றை அகற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும் வாகன டிரைவர்கள் 43 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து, ரூ.9,900 அபராதம் விதிக்கப்பட்டது. குன்னூர் பஸ் நிலையத்தில் நடந்த சோதனையில், வாகனங்களில் விதிமுறைகளை மீறி பொருத்திய கட்சி கொடிகள், தலைவர்களின் படங்களை நகர போலீசார் அகற்றினர்.
வாகன உரிமையாளர்கள் எந்தவித விதிவிலக்கும் இன்றி அமல்படுத்தப்பட்ட விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இல்லையென்றால் காவல்துறை, வட்டார போக்குவரத்து துறை மூலம் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.