கட்டுமான பணியின்போது 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த இனாமுல் ஹக் எதிர்பாராதவிதமாக அங்கிருந்து தவறி கீழே விழுந்து இறந்தார்.
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் இனாமுல் ஹக் (வயது 31). இவர், சென்னை பாடி ஜெகதாம்பிகை நகரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் தங்கி, திருமுல்லைவாயல் அடுத்த திருமலைவாசன் நகரில் நடைபெற்று வரும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது மாடியில் துளைபோடும் பணியில் ஈடுபட்டு இருந்த இனாமுல் ஹக், எதிர்பாராதவிதமாக அங்கிருந்து தவறி கீழே விழுந்து விட்டார். தலையில் படுகாயம் அடைந்த இனாமுல் ஹக், அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.