சப்-இன்ஸ்பெக்டரின் தந்தை அடித்துக் கொலை
நாகர்கோவில் அருகே சப்-இன்ஸ்பெக்டரின் தந்தை அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக இளைய மகனை போலீசார் கைது செய்தனர்.;
மேலகிருஷ்ணன்புதூர்:
நாகர்கோவில் அருகே சப்-இன்ஸ்பெக்டரின் தந்தை அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக இளைய மகனை போலீசார் கைது செய்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் தந்தை
நாகர்கோவில் அருகே உள்ள மேலகிருஷ்ணன்புதூரை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 74). இவருடைய மனைவி செல்லவடிவு. இந்த தம்பதிக்கு 4 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர்.
இவர்களுடைய இளைய மகன் அச்சுதன் (38). தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
அச்சுதனின் மூத்த சகோதரர் ஜெயபால், ஈத்தாமொழி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.
அடித்துக் கொலை
சரியாக வேலைக்கு செல்லாமல் அச்சுதன் இருந்துள்ளார். மேலும் மது பழக்கம் உடைய அவர், வீட்டுக்கு மதுகுடித்து விட்டு வரும் போது பெற்றோரிடம் தகராறு செய்வது வழக்கமாம். இந்தநிலையில் கடந்த 29-ந் தேதி அச்சுதன் மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். இதனை பெற்றோர் தட்டிக்கேட்டுள்ளனர். இதனால் அச்சுதன், சிவலிங்கத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் முற்றி அவர்களுக்கிடையே கைகலப்பாக மாறியது.
இதில் ஆத்திரமடைந்த அச்சுதன் தந்தை என்றும் பாராமல் சிவலிங்கத்தை கீழே தள்ளி சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதனை தடுக்க வந்த தாயார் செல்ல வடிவுக்கும் அடி விழுந்தது.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சிவலிங்கம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக செல்லவடிவு கொடுத்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அச்சுதனை கைது செய்தனர். இந்தநிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி சிவலிங்கம் பரிதாபமாக இறந்தார். இதனை தொடர்ந்து கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
பரபரப்பு வாக்குமூலம்
பின்னர் கைதான அச்சுதன், தந்தையை கொன்றது ஏன்? என்பது குறித்து போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அதாவது வேலைக்கு சரியாக செல்லாத நிலையில் அச்சுதன் மோதிரம் ஒன்றை நிதி நிறுவனத்தில் அடகு வைத்துள்ளார். ஓராண்டு நிறைவடைந்த பிறகு மோதிரத்தை அவரால் திருப்ப முடியவில்லை. இதனால் நிதி நிறுவனம் அச்சுதனுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதையடுத்து பெற்றோரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். ஆனால் அவர்கள் பணம் கொடுக்க மறுத்து விட்டனர்.
இந்த நிலையில் வீட்டுக்கு மதுபோதையில் வந்த அச்சுதன், சிவலிங்கத்துடன் தகராறு செய்து தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.
தந்தையை பெற்ற மகனே அடித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.