தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை; அதிர்ச்சியில் தாயும் உயிரிழந்த பரிதாபம் சேலத்தில் அடுத்தடுத்து நடந்த சோகம்

சேலத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாய் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

Update: 2021-10-01 21:14 GMT
சேலம்
சேலத்தில் அடுத்தடுத்து நடந்த சோகம் பற்றிய விவரம் வருமாறு:-.
தற்கொலை
சேலம் கோட்டை பகுதியை சேர்ந்தவர் முகமது பாஷா. இவருடைய மனைவி நூர்ஜஹான் (வயது 65). இவர்களது மகன் முகமது நிஜாமுதீன் (35). வீட்டின் அருகே முகமது பாஷா பிரிண்டிங் பிரஸ் வைத்துள்ளார். முகமது நிஜாமுதீன் எம்.எஸ்.சி. முடித்துவிட்டு தனது தந்தைக்கு உதவியாக பிரிண்டிங் பிரஸ்சில் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முனதினம் தனது அறைக்கு தூங்க சென்ற முகமது நிஜாமுதீன் நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் எழுந்து வரவில்லை. இதனால் அவரது பெற்றோர் அறையின் கதவை திறந்து பார்த்தனர். அப்போது, தூக்கில் தொங்கிய நிலையில் முகமது நிஜாமுதீன் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய தாய் நூர்ஜஹான், தனது நெஞ்சை பிடித்தபடி கீழே மயங்கி விழுந்தார்.
தாயும் சாவு
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிறிது நேரத்தில் நூர்ஜஹான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மகன் தற்கொலை செய்து தூக்கில் பிணமாக தொங்கியதை நேரில் பார்த்ததால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.
தகவல் அறிந்த டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தற்கொலை செய்து கொண்ட முகமது நிஜாமுதீனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகன் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு தாயும் இறந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்