சிறுமிக்கு பாலியல் தொல்லை; போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
நெல்லை:
பணகுடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
போலீஸ் ஏட்டு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கருங்கல் பகுதியைச் சேர்ந்தவர் அருள் ஜாக்சன் (வயது 42). இவர் நெல்லை மாவட்டம் பணகுடி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் அருள் ஜாக்சனுக்கு, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த திருமணமான இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அந்த இளம்பெண்ணுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
பணியிடை நீக்கம்
இதையடுத்து இளம்பெண் தனது கணவரை பிரிந்து தன்னுடைய 2 மகள்களுடன், பணகுடியில் வீடு ஒன்றை எடுத்து அருள் ஜாக்சனுடன் குடும்பம் நடத்தி வந்தார். இதற்கிடையே அந்த இளம்பெண்ணின் 13 வயது மகளுக்கு அருள் ஜாக்சன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்துள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வள்ளியூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அருள் ஜாக்சனை கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த அருள் ஜாக்சனின், கள்ளக்காதலியும் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டு அருள் ஜாக்சனை, நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.