ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
7 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
ராணிப்பேட்டை
ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் 7 நாட்கள் மதுபான கடைகள் மூடப்படும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
7 நாட்கள் மூடப்படும்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 6 மற்றும் 9-ந் தேதிகள் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. மேலும் 12-ந் தேதி உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகிற 4-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை 6 நாட்களும், வாக்கு எண்ணிக்கை நடக்கும் 12-ந் தேதி ஒருநாளும் என மொத்தம் 7 நாட்கள் மதுபான விற்பனை இல்லாத தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதலால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மதுபானக் கடைகள் இந்த 7 நாட்கள் முழுவதுமாக இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால் சம்பந்தப்பட்ட சில்லரை விற்பனை கடைகளில் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
உரிமம் ரத்து
அதேபோல் மதுபானக் கூடங்கள் திறக்கப்பட்டு இருந்தாலும், மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தாலும் மதுபான கூடங்களின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், உரிமங்களை ரத்து செய்தல் மற்றும் மது கூட உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.