ஈரோட்டில் பலத்த மழை: அரசு பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து கார் சேதம்
ஈரோட்டில் பெய்த கனமழை காரணமாக அரசு பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து கார் சேதமடைந்தது.;
ஈரோடு
ஈரோட்டில் பெய்த கனமழை காரணமாக அரசு பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து கார் சேதமடைந்தது.
கனமழை
ஈரோட்டில் நேற்று முன்தினம் மாலையில் திடீரென கன மழை பெய்தது. சுமார் 2 மணி நேரமாக பெய்த பலத்த மழையால், பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்தது. ஈரோடு ஆர்.கே.வி.ரோடு பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
பலத்த மழையால் ஈரோடு மாநகராட்சி காமராஜ் மேல்நிலை பள்ளிக்கூடத்தின் சுற்றுசுவர் இடிந்து விழுந்தது. அப்போது அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. அதேசமயம் சுற்றுச்சுவர் அருகில் நிறுத்தப்பட்டு இருந்த கார் சேதமடைந்தது. மழை காரணமாக பல இடங்களில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டது. அங்கு நேற்று தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்கள்.
65 மில்லி மீட்டர்
ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் செயல்படும் தற்காலிக காய்கறி மார்க்கெட் சேறும், சகதியுமாக மாறியது. இதனால் லாரிகளில் இருந்து காய்கறிகளை இறக்கி கடைகளுக்கு கொண்டு சென்று வைத்த தொழிலாளர்கள், காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்கள் உள்ளிட்டோர் மிகவும் சிரமப்பட்டார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
ஈரோடு - 65
பவானி - 4.4
கொடிவேரி - 4