பெங்களூருவில் டிரைவரை தாக்கி விட்டு கார் கடத்தல்: பிரபல ரவுடிகள் 2 பேர் வாழப்பாடியில் சிக்கினர் நண்பரை கொலை செய்ய வந்தது அம்பலம்
கர்நாடகாவில் இருந்து டிரைவரை தாக்கி விட்டு காரை கடத்தி வந்த பிரபல ரவுடிகள் 2 பேர் வாழப்பாடியில் சிக்கினர். அவர்கள் இருவரும் நண்பரை கொலை செய்ய வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
வாழப்பாடி,
கார் கடத்தல்
கர்நாடக மாநிலம் பெங்களூரு கூலி நகர் குடியிருப்பு நந்தினி லே-அவுட் பகுதியில் வசிப்பவர் மணி என்கிற மாணிக்கம் (வயது 26). பெங்களூரு அம்பேத்கர் நகர் விஷ்வந்த்புரா பகுதியைச் சேர்ந்தவர் சகாய ஆலி (30). பிரபல ரவுடிகளான இவர்கள் 2 பேரும், பெங்களூருவில் குறிப்பிட்ட ஒரு பகுதிக்கு செல்ல வாடகை கார் ஒன்றை ஆன்லைனில் பதிவு செய்தனர்.
பெங்களூரு நகரில் ஓகேஅல்லி நைஸ் ரோடு பகுதியில் சென்றபோது சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கூறி டிரைவர் காரை விட்டு நிறுத்தி விட்டு இறங்கினார். அப்போது கார் டிரைவரை தாக்கி ஆடைகளைக் களைந்த அவர்கள் இருவரும், டிரைவரிடம் இருந்த செல்போனை பிடுங்கிக்கொண்டனர். பின்னர் அந்த காரில் தமிழகத்துக்கு புறப்பட்டு வந்தனர். கார் கடத்தல் குறித்து தகவல் அறிந்த கர்நாடக போலீசார் வாடகை காரை கடத்திய ரவுடிகள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
போலீசில் சிக்கினர்
வாடகை காரில் பொருத்தப்பட்டு இருந்த பாஸ்டேக் மூலம் தமிழகத்தில் சேலம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் அமைந்த சுங்கச்சாவடிகளை கடந்து கார் சென்றது கர்நாடக போலீசாருக்கு தெரியவந்தது. இதுகுறித்து தமிழக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வாழப்பாடி போலீசார் நேற்று முன்தினம் இரவு வாழப்பாடி அருகே உள்ள மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது கர்நாடக போலீசார் குறிப்பிட்ட அந்த வாடகை கார் மேட்டுப்பட்டி சுங்கச்சாவடியை கடந்த போது, வாழப்பாடி போலீசார் அந்த காரை மடக்கி பிடித்ததுடன், காரில் வந்த மாணிக்கம், சகாய ஆலி ஆகிய இருவரையும் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
நண்பரை கொல்ல
கர்நாடக மாநில சிறையில் மாணிக்கமும், சகாய ஆலியும் இருந்த போது சிறையில் உடன் இருந்த கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த சிங்காரவேல் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அவர்கள் நண்பர்களாக மாறி உள்ளனர். இந்த நிலையில் ஒரு வழக்கு ஒன்றில் மாணிக்கமும், சகாய ஆலியும் சிறை சென்றனர்.
அவர்கள் இருவரும் போலீசில் சிக்குவதற்கு சிறை நண்பர் சிங்காரவேல் தான் காரணம் என கருதினர். இதையடுத்து அவரை கொலை செய்ய திருட்டு காரில் கள்ளக்குறிச்சிக்கு வந்துள்ளனர். அங்கு அவர் இல்லாததால் திரும்பி பெங்களூருவுக்கு சென்ற போது போலீசில் சிக்கிகொண்டது தெரிய வந்துள்ளது.
மேலும் மாணிக்கத்தின் மீது 8-க்கும் மேற்பட்ட கொலை மற்றும் வழிப்பறி கொள்ளை வழக்குகள் கர்நாடகாவில் இருப்பதும் தெரியவந்தது. சகாய ஆலி மீதும் 3-க்கும் மேற்பட்ட கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. நேற்று அதிகாலை கர்நாடகாவில் இருந்து வந்த போலீசார் மாணிக்கம் மற்றும் சகாயஆலி இருவரையும் கைது செய்து கர்நாடகாவிற்கு கொண்டு சென்றனர்.
வாடகை காரை கடத்தி சென்று நண்பரை கொலை செய்ய திட்டமிட்டு சுங்கச்சாவடி பாஸ்டேக் மூலம் ரவுடிகள் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.