டைரக்டர் பா.ரஞ்சித் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

டைரக்டர் பா.ரஞ்சித் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

Update: 2021-09-30 20:10 GMT
மதுரை, 
சினிமா டைரக்டர் பா.ரஞ்சித், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது-
நீலப்புலிகள் அமைப்பின் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினேன். அப்போது, பேரரசர் ராஜராஜ சோழனின் வரலாற்று உண்மைகள் சிலவற்றை குறிப்பிட்டேன்.
குறிப்பாக, டெல்டா பகுதியில் நிலமற்றவர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்த உமர் பாரூக்கின் "செந்தமிழ் நாட்டு சேரிகள்" எனும் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளவை குறித்தும் பேசினேன். பல்வேறு வரலாற்றுப் புத்தகங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களையே நான் பேசினேன்.
இந்த தகவலை வேறு பலரும் பேசி உள்ளனர். ஆனால் என்னுடைய பேச்சு மட்டும் சமூக வலைதளங்களில் தவறாகச் சித்தரிக்கப்பட்டது. நான் உள்நோக்கத்துடன் எந்த கருத்தையும் பதிவு செய்யவில்லை. மேலும் எனது கருத்து எந்த சமூகத்திற்கும் எதிராக அமையவில்லை. எனவே என் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரிக்கப்பட்டபோது, மனுதாரர் மீதான வழக்கு விசாரணையின் இறுதி அறிக்கையை, சம்பந்தப்பட்ட கோர்ட்டில் தாக்கல் செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவடைந்ததால் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.

மேலும் செய்திகள்