டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

விழுப்புரம் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.1.80 லட்சம் சிக்கியது.

Update: 2021-09-30 18:03 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு தேவநாதன், மாவட்ட ஆய்வுக்குழு தலைவர் ஜெகதீசன், லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜேசுதாஸ், ஏட்டுகள் விஜயதாஸ், பாலமுருகன், நரசிம்மராவ், கவுஸ்பீர் ஆகியோர் அடங்கிய குழுவினர் விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலையில் உள்ள மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்திற்கு நேற்று சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அங்கு மேலாளர் அலுவலகம், டாஸ்மாக் குடோன் ஆகியவற்றில் பணியில் இருந்த அலுவலர்கள், ஊழியர்களை வெளியே எங்கும் செல்லாதவாறு கதவை பூட்டிக்கொண்டு போலீசார் சோதனையை தொடர்ந்தனர். 
அலுவலக அறை முழுவதும் கண்காணித்ததோடு அங்கிருந்த மேஜை டிராயர், பீரோக்கள் என அனைத்தையும் திறந்து தீவிர சோதனையிட்டனர்.

ரூ.1.80 லட்சம் சிக்கியது

பகல் 12 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை மாலை 5 மணி வரை நீடித்தது. இந்த சோதனையின்போது டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்திற்கு வந்திருந்த செஞ்சி அருகே வி.நயம்பாடியை சேர்ந்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் ஒருவர் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை வைத்திருந்தார். அவரிடம் போலீசார் விசாரித்ததில், அவர் ஏற்கனவே பணியில் இருந்து ஒழுங்கு நடவடிக்கையாக சஸ்பெண்டு செய்யப்பட்டவர் என்பதும், சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்து மீண்டும் பணியிடம் வழங்கக்கேட்டு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக பணம் கொண்டு வந்திருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அவரிடமிருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து, மேலாளர் அலுவலகத்தை சோதனை செய்ததில் அங்குள்ள கணினி அறையில் ஒரு தபால் உறையில் ரூ.30 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி அங்குள்ள ஊழியர்களிடம் விசாரித்ததில் அந்த பணத்திற்கு யாரும் உரிமம் கோராததால் அந்த பணத்தையும் போலீசார் கைப்பற்றினர்.

தொடர்ந்து விசாரணை

மேலும் சோதனையின் முடிவில் அங்கிருந்த சில முக்கிய ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத ரூ.1.80 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து, இதுகுறித்து மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்