உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

நாகை ஊரக வளர்ச்சி முகமை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.70 ஆயிரத்து 500 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-09-30 17:56 GMT
நாகப்பட்டினம்:
நாகை ஊரக வளர்ச்சி முகமை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.70 ஆயிரத்து 500 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
உதவி செயற்பொறியாளர் அலுவலகம்
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் முதல் தளத்தில் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள சாலைகள், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளுக்கு இந்த அலுவலகத்தில்தான் ஒப்புதல் வழங்கப்படும். இவ்வாறு ஒப்புதல் வழங்குவதற்கு ஒப்பந்ததாரர்களிடம் இருந்து லஞ்ச பணம் பெறுவதாக நாகை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன.
கணக்கில் வராத ரூ.70 ஆயிரம் பறிமுதல்
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சித்திரவேலு தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்குமார், அருள்பிரியா ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு ஒப்பந்ததாரர்கள் பலர் இருந்தது தெரிய வந்தது. மேலும் கணக்கில் வராத ரூ.70 ஆயிரத்து 500 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 
பல்வேறு பணிகளுக்காக ஒப்பந்ததாரர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம், ரூ.7 ஆயிரம், ரூ.10 ஆயிரம் என தனித்தனியாக லஞ்ச பணம் பெற்று இருப்பதும் தெரிய வந்தது. 
பரபரப்பு
நாகை ஊரக வளர்ச்சி முகமை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.70 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மேலும் செய்திகள்