உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக கூறி பொதுமக்கள் தர்ணா

குமரன் லே-அவுட் பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக கூறி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கலெக்டர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Update: 2021-09-30 17:51 GMT
கரூர், 
அடிப்படை வசதிகள்
தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், மேலப்பாளையம் பஞ்சாயத்து, வடக்குப்பாளையம் குமரன் குடில் மற்றும் குமரன் லே-அவுட் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 
இந்தநிலையில், அடிப்படை வசதிகள் இல்லாததால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாக கூறி பொதுமக்கள் சார்பில் நேற்று பதாகை வைக்கப்பட்டது. அந்த பதாகையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தேர்தல் புறக்கணிப்பு
குமரன் குடில் மற்றும் குமரன் லே-அவுட் பகுதி மக்களாகிய நாங்கள் எங்களுக்குரிய அடிப்படை தேவைகளுக்கு தீர்வு கிடைக்கப்பெறாததால் வருகிற உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கிறோம். குடிக்க தண்ணீர் இல்லை, கழிவுநீர் வடிகால் இல்லை. நல்ல சாலைகள் இல்லை.
இந்த தேர்தலில் நாங்கள் வாக்களிக்கப்போவதும் இல்லை. நல்லவைகளை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். எங்களது உரிமைகளை பறிக்காதீர்கள் என கூறப்பட்டு இருந்தது. மேலும் அப்பகுதிகளில் கருப்பு கொடி கட்டி, பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலெக்டர் ஆய்வு
பொதுமக்களின் போராட்டம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி  கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். மேலும், மக்களின் ஜனநாயக கடமையாகிய வாக்களிக்கும் கடமையிலிருந்து யாரும் பின்வாங்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டார்.
இதற்கிணங்க பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு பதாகையை அகற்றி அனைவரும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதாக உறுதியளித்தனர்.
கருப்பு கொடி அகற்றம்
இதனைதொடர்ந்து 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. மேலும், தெருவிளக்குகள் அமைக்கப்பட்டு, புதிய மின் மாற்றி 2 நாட்களுக்குள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும், சாலை வசதி மற்றும் கழிவுநீர் வடிகால் வசதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பணிகளை எடுத்து செய்ய உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவும் கலெக்டர் உத்தரவிட்டார்.
மேலும் அனைத்து பணிகளும் 3 மாதத்திற்குள் முடித்துகொடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் வைக்கப்பட்டு இருந்த கருப்பு கொடியை பொதுமக்கள் அகற்றினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்