கொரோனா தடுப்பூசி கணக்கெடுக்கும் பணிக்கு ஒத்துழைப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் கணக்கெடுக்கும் பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கலெக்டர் மோகன் அறிவுரை கூறினார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் அனைவருக்கும் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் டி.மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தில் கிராமப்புற, நகர்ப்புற மற்றும் பேரூராட்சி பகுதிகளில் சுகாதாரத்துறை பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக வீடு, வீடாக சென்று பொதுமக்கள், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதை உறுதி செய்திட வேண்டும். முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், குறிப்பிட்ட கால இடைவெளியில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் அறிவுறுத்த வேண்டும்.
கணக்கெடுக்கும் பணி
மாவட்டத்தில் இதுநாள் வரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் முதல் தவணை செலுத்திக்கொண்டவர்கள் எண்ணிக்கை, 2-ம் தவணை செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் பணிகள் 2 நாட்களுக்குள் நடைபெற வேண்டும். இந்த கணக்கெடுக்கும் பணிகளில் கிடைத்த புள்ளி விவரத்தை அடிப்படையாக கொண்டு விழுப்புரம் மாவட்டத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்வதற்கு வழிவகுக்கும். இப்பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கி சரியான தகவல்களை அளிக்க வேண்டும். பெறப்படும் இந்த தகவலின் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்திற்கு தேவையான தடுப்பூசிகள் பெறப்பட்டு அனைவருக்கும் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முழு நடவடிக்கை எடுக்கப்படும்.
வரும் காலங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து ரேஷன் கடைகளிலும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்படும். இம்முகாமை அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் திண்டிவனம் சப்-கலெக்டர் அமித், மகளிர் திட்ட அலுவலர் காஞ்சனா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பிரபாகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மோகன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பொற்கொடி உள்பட பலர் கலந்துகொண்டனர்.