மோட்டார் சைக்கிள்கள் மோதி மூதாட்டி உள்பட 3 பேர் படுகாயம்

இருவேறு விபத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதி மூதாட்டி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.;

Update: 2021-09-30 17:33 GMT
நொய்யல், 
மூதாட்டி படுகாயம்
புன்னம்சத்திரம் அருகே மூலிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி செல்லம்மாள் (வயது 58). இவர் மூலிமங்கலம் பகுதியிலிருந்து பழமாபுரம் நோக்கி நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த மூலிமங்கலம் பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பவர் செல்லம்மாள் மீது பயங்கரமாக மோதினார். 
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த மூதாட்டியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கரூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மோட்டார் சைக்கிள்கள் மோதல்
இதேபோல் தோட்டக்குறிச்சி ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் பிரேம்குமார் (28). இவரும் அவரது சித்தப்பா முருகேசன் (50) என்பவரும் வாத்துக்கறி வாங்குவதற்காக தோட்டக்குறிச்சியிலிருந்து தளவாபாளையம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். பிரேம்குமார் மோட்டார் சைக்கிளை ஓட்டினார்.
அப்போது புகளூர் ஹைஸ்கூல் மேடு பகுதியை சேர்ந்த அஜீஸ் (20) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்று பிரேம்குமார் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதினார். இந்த விபத்தில் பிரேம்குமார், அவரது சித்தப்பா முருகேசன் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
இதையடுத்து, அந்த வழியாக சென்றவர்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்