பொன்னமராவதி, விராலிமலை, கறம்பக்குடியில் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பொன்னமராவதி, விராலிமலை, கறம்பக்குடியில் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-09-30 17:15 GMT
பொன்னமராவதி:
ஆர்ப்பாட்டம்
பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த வருவாய்த்துறை அலுவலர்களின் குடும்பங்களுக்கு முதல்-அமைச்சர் அறிவித்தபடி ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். கருணை அடிப்படையிலான நியமனதாரர்களின் பணியினை அரசாணையின்படி வரன்முறை படுத்தி வலியுறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 
விராலிமலையில்
விராலிமலை தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு விராலிமலை வட்ட கிளை தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்விற்கு அவசியமான அடிப்படை பயிற்சிகளை உடனடியாக உரிய காலத்தில் மாவட்ட அளவில் நடத்திட வேண்டும் இல்லையெனில் பயிற்சிக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
கோஷம்
தாசில்தார் காலி மதிப்பீட்டு அறிக்கையினை உடனடியாக வெளியிடவும், மாவட்ட பதிவறை எழுத்தர், ஈப்பு ஓட்டுனர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் காலி பணியிடங்களை நிரப்பிட வழங்கப்பட்ட அரசாணையை உடனடியாக அமல்படுத்தவேண்டும். சட்டமன்ற தேர்தல் நடத்தியதற்கான நிதியினை முழுமையாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் விராலிமலை வட்ட கிளையை சேர்ந்த தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். முடிவில் விராலிமலை வருவாய் ஆய்வாளர் சுரேந்திரன் நன்றி கூறினார்.
கறம்பக்குடி
கறம்பக்குடி வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு பல்ேவறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் ராமதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்