சாமி சிலையில் கிடந்த தங்க சங்கிலி திருட்டு
கன்னிவாடி அருகே பொய்யாரப்பன் கோவிலில், சாமி சிலையில் கிடந்த தங்க சங்கிலியை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
கன்னிவாடி:
பொய்யாரப்பன் கோவில்
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே ஆலத்தூரான்பட்டியில் பொய்யாரப்பன் கோவில் உள்ளது. இந்த கோவில் தினமும் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படுவது வழக்கம்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு கோவிலை பூட்டி விட்டு பூசாரி ஆறுமுகம் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை 6 மணி அளவில் கோவிலை திறப்பதற்காக ஆறுமுகம் அங்கு வந்தார். அப்போது கோவில் கதவுகள் திறந்து கிடந்தன.
சிலையில் கிடந்த சங்கிலி திருட்டு
கோவிலுக்குள் சென்று பார்த்தபோது, உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 2 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது.
இதுமட்டுமின்றி பொய்யாரப்பன் சாமி சிலையின் கழுத்தில் கிடந்த 2 பவுன் சங்கிலியையும் மர்ம நபர்கள் திருடி சென்றிருந்ததை கண்டு ஆறுமுகம் அதிர்ச்சி அடைந்தார்.
இதேபோல் கோவிலில் இருந்த 2 உண்டியல்கள் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணமும் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகிகளுக்கு பூசாரி ஆறுமுகம் தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் கோவில் தலைவர் சுப்பிரமணி, செயலாளர் தங்கராசு, பொருளாளர் ராமலிங்கம் ஆகியோர் அங்கு விரைந்தனர்.
மோப்பநாய் சோதனை
இதுதொடர்பாக கன்னிவாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் தங்கராசு தலைமையிலான போலீசார் கோவிலுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் மோப்பநாய் ரூபி வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்தப்படி ஓடிச்சென்ற மோப்பநாய், ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாப்பாத்தி அம்மன் கோவில் அருகே படுத்து விட்டது. அது, யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
கடப்பாரை
இதற்கிடையே கோவில் கதவின் பூட்டை உடைக்க பயன்படுத்திய கடப்பாரை மற்றும் ஸ்குரு டிரைவர் ஆகியவை அங்கேயே கிடந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைகளை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கோவிலில் தங்க நகைகள் திருட்டு போன சம்பவம் கன்னிவாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.