உடன்குடியில் தற்கொலை செய்து கொண்ட போலீஸ்காரரின் மனைவி குத்திக்கொலை

உடன்குடியில் தற்கொலை செய்து கொண்ட போலீஸ்காரின் மனைவி சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2021-09-30 14:17 GMT
உடன்குடி:
உடன்குடியில் தற்கொலை செய்து கொண்ட போலீஸ்காரின் மனைவி சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் வீடு புகுந்து இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மருமகனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
போலீஸ்காரர் மனைவி
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பிள்ளையார்பெரியவன்தட்டு பகுதியைச் சேர்ந்தவர் செல்வமுருகன். இவர் திருச்செந்தூரில் தனிப்பிரிவு போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி அருணா (வயது 40). இவர்களுக்கு கமலேஷ் (20), அகிலேஷ் (10) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
சென்னையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் கமலேஷ் படித்து வருகிறார். அகிலேஷ் உள்ளூரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான்.
குடும்ப தகராறு காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1-ந் தேதி செல்வமுருகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் அருணா குழந்தைகளுடன் அங்குள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். செல்வமுருகனின் நினைவு தினம் இ்ன்று (வெள்ளிக்கிழமை) அனுசரிக்கப்பட இருந்தது.
தனியாக பேசினார்
இந்த நிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் செல்வமுருகனின் அக்காள் மகனான அதே பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (32) என்பவர் அருணாவின் வீட்டிற்கு வந்தார். அப்போது, அங்கு அருணாவின் அம்மா வேலம்மாள், மகன் அகிலேஷ் ஆகியோருடன் பேசிக் கொண்டு இருந்தார்.
மேலும் முத்துக்குமார் தனது அத்தை அருணாவிடம் தனியாக பேச வேண்டும் என்றும், அதுவரை நீங்கள் 2 பேரும் வெளியே காத்திருங்கள் என்றும் கூறினார். இதையடுத்து வேலம்மாள், அகிலேஷ் ஆகியோர் வெளியே சென்றனர். 
சரமாரி குத்திக்கொலை
வீட்டில் அருணாவும், முத்துக்குமாரும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது, தனது மாமா செல்வமுருகன் தற்கொலைக்கு நீதான் காரணம் என்று கூறி அருணாவிடம் முத்துக்குமார் தகராறு செய்தார். இதில் ஆத்திரம் அடைந்த முத்துக்குமார் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் அருணாவை குத்தினார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அருணாவின் உடலில் 21 இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்தியதாகவும், அவரது கழுத்தை அரிவாளால் வெட்டியதாகவும் கூறப்படுகிறது. அவரது சத்தம் கேட்டு வெளியே இருந்த வேலம்மாள், அகிேலஷ் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அருணா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே, முத்துக்குமார் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார்.
பரபரப்பு
இதுகுறித்து உடனடியாக குலசேகரன்பட்டினம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங், இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அருணா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
இந்த கொடூரக்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய முத்துக்குமாரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
உடன்குடியில் பட்டப்பகலில் போலீஸ்காரரின் மனைவி சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்