கோவில்பட்டியில் தினசரி சந்தை நுழைவு வாயிலை திறக்க கோரி ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் தினசரி சந்தை நுழைவு வாயிலை திறக்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது

Update: 2021-09-30 13:23 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டி நகராட்சிக்கு சொந்தமான தினசரி சந்தை நுழைவுவாயில் திறக்கப்படாததை கண்டித்து கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன் தலைமை தாங்கினார். கூட்டமைப்பு செயலாளர் வக்கீல் பெஞ்சமின் பிராங்கிளின், பொருளாளர் செல்லத்துரை, சமத்துவ மக்கள் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.பாஸ்கரன், வக்கீல் ரவிக்குமார், அனைத்து ரத்ததான கழக தலைவர் காளிதாஸ், ஐ.என்.டி.யு.சி. மாவட்ட செயலாளர் ராஜசேகர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து உதவி கலெக்டர் சங்கரநாராயணனிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவில்பட்டி நகராட்சிக்கு சொந்தமான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நகராட்சி தினசரி சந்தை நுழைவுவாயிலில் உள்ள சேதமடைந்த நுழைவு வாயிலை அப்புறப்படுத்திவிட்டு, புதிதாக நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பயன்பாட்டுக்காக இது திறக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. ஆனால், அரசியல் காரணங்களால், மீண்டும் நகராட்சி நிர்வாகத்தால் மூடப்பட்டுள்ளது. ஏற்கனவே, கட்டிட வேலைக்காக 2 மாதங்களாக நுழைவுவாயில் பூட்டப்பட்டு இருந்தது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து வந்தனர். தற்போது நுழைவுவாயில் அடைக்கப்பட்டுள்ளது. எனவே, மூடப்பட்டுள்ள தினசரி சந்தை நுழைவுவாயிலை திறக்க வேண்டும், என கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்