பொதுமக்கள் திடீர் சாலைமறியல்
திருப்பூர் குமார்நகரில் குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
அனுப்பர்பாளையம்
திருப்பூர் குமார்நகரில் குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
திருப்பூர் மாநகராட்சி 12 வது வார்டு முருங்கப்பாளையம் மற்றும் சுற்று வட்டாரத்தில் 200 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அந்த பகுதிக்கு கடந்த 6 மாதங்களாக 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அங்கு கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பாதிப்படைந்த அப்பகுதி மக்கள் குடிநீர் முறையாக வழங்கக்கோரி மாநகராட்சிக்கு பலமுறை மனு கொடுத்துள்ளனர். ஆனால் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த முருங்கப்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் முன்னான் கவுன்சிலர் ரவிச்சந்திரன் தலைமையில் நேற்று காலை திருப்பூர் அவினாசி ரோடு குமார்நகர் சந்திப்பில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி 1வது மண்டல உதவி கமிஷனர் சுப்பிரமணியம், 15 வேலம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் சமரசம் அடையாத பொதுமக்கள் மாநகராட்சி கமிஷனர் வந்து உறுதியளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி 2 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாநகராட்சி நிர்வாக பொறியாளர் சபியுல்லா சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது 7 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். இதன் பின்னர் அங்கிருந்து மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்ற பொதுமக்கள் அங்கு வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். மேலும் மதிய உணவை அங்கேயே சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த போராட்டம் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.