ஈஞ்சம்பாக்கம் ஏரி குடியிருப்பு பகுதியில் கே.பாலகிருஷ்ணன் ஆய்வு; பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்
ஈஞ்சம்பாக்கம் ஏரி குடியிருப்பு பகுதியில் கே.பாலகிருஷ்ணன் மக்களை சந்தித்து பிரச்சினைகள் குறித்து குறைகளை கேட்டறிந்தார்.
சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் ஏரி மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் சுமார் 4 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. இங்கு வசிக்கும் குடியிருப்புவாசிகளை அகற்றக்கூறிய சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில், பெத்தேல் நகர் குடியிருப்புகளுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் நோட்டீசு ஒட்டி சென்றதாக தெரிகிறது.இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பெத்தேல் நகர் பகுதிகளை நேற்று பார்வையிட்டார். அப்போது அப்பகுதியில் வசிக்கும் மக்களை சந்தித்து பிரச்சினைகள் குறித்து குறைகளை கேட்டறிந்தார். அதன் பின்னர் நிருபர்களிடம் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:-
பெத்தேல் நகரில் சுமார் 40 ஆண்டுகளாக மக்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சியாக இருந்து, மாநகராட்சியாக மாறிய இந்தப் பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டு, வீடுகளுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு தரப்பட்டுள்ளது.இந்த நிலையில், குடியிருப்பு பகுதியான இப்பகுதியை நீர்நிலை, சதுப்புநிலம் எனக்கூறி தவறான ஆவணங்களுடன் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளனர். அதன் காரணமாக குடியிருப்புவாசிகளை காலி செய்ய கூறி நோட்டீசு வழங்கப்பட்டுள்ளது.இந்த பிரச்சினையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.