காஞ்சீபுரம் மாவட்டத்தில் 34 இடங்களில் திடீர் வாகன சோதனை - போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் நடந்தது
காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் 34 இடங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் மேற்பார்வையில் போலீசார் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி கடந்த 10 நாட்களாக 100-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் ரவுடிகளின் வீடுகளில் போலீசார் சோதனை செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் உத்தரவின்படி 200 போலீசார் மாவட்டம் முழுவதும் 34 இடங்களில் "DISARMS OPERATION ” என்ற பெயரில் திடீர் வாகன சோதனை செய்தனர். இந்த வாகன சோதனையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் நேரடியாக களஆய்வு மேற்கொண்டார்.
இந்த வாகன சோதனையின் போது போக்குவரத்து விதிமீறிய 1617 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விதிமீறல் குறித்து போலீசார் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கினர்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் நிறைவு பெறும் வரை இது போன்ற திடீர் வாகனசோதனையில் மாவட்டம் முழுவதும் ஈடுபட்டு ரவுடிகள் கைது செய்யப்படுவர். பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை போலீசார் உறுதி செய்வர் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் தெரிவித்தார்.