தசரா யானைகளுக்கு வெடி சத்த பயிற்சி இன்று முதல் தொடங்குகிறது
மைசூரு அரண்மனையில் தசராவிழாவில் ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்கும் யானைகளுக்கு வெடி சத்த பயிற்சி இன்று (வியாழக்கிழமை) முதல் தொடங்குகிறது.
மைசூரு: மைசூரு அரண்மனையில் தசராவிழாவில் ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்கும் யானைகளுக்கு வெடி சத்த பயிற்சி இன்று (வியாழக்கிழமை) முதல் தொடங்குகிறது.
மைசூரு தசரா விழா
மைசூரு தசரா விழா இந்தாண்டு(2021) அடுத்தமாதம்(அக்டோபர்) 7 முதல் 15-ந்தேதி வரை கொண்டாடப்படுகிறது. கொரோனா காரணமாக எளிமையாக கொண்டாடப்படுகிறது. தசரா விழாவை முன்ளாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா தொடங்கி வைக்க உள்ளார்.இதற்கிடையே ஜம்புசவாரி ஊர்வலத்தில் தங்கஅம்பாரியை சுமக்கும் அபிமன்யு உள்ளிட்ட 8 யானைகளுக்கு பாரம் சுமக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
வெடிசத்த பயிற்சி
ஜம்பு சவாரி ஊர்வலத்தை தொடங்கும்போது 21 முறை பீரங்கி குண்டுகள் வானத்தை நோக்கி சுடப்படும். இந்த நிலையில் மைசூரு அரண்மனையில் பீரங்கி குண்டு வெடிசத்தம், குண்டு நெடியை தாங்கும் வகையில் தசரா யானைகளுக்கு இன்று(வியாழக்கிழமை) முதல் பயிற்சி அளிக்கப்படுகிறது.
அதாவது, மைசூரு அரண்மனைக்கு வெளிப்புறம் அமைந்துள்ள கோட்டை மாரியம்மன் கோவில் அருகே காலை 11 மணியளவில் யானைகளுக்கு பீரங்கி குண்டுகள் சத்த பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
போலீஸ் கமிஷனர் முன்னிலையில்...
அப்போது 8 யானைகள், குதிரைகள் ஆகியவை அணிவகுப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு 6 பீரங்கிகளில் குண்டுகள் நிரப்பப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் வெடிக்க வைத்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி மைசூரு போலீஸ் கமிஷனர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் நடக்கிறது.