முதியவர்களை ஏமாற்றி பணம் திருட்டு
திருவிைடமருதூர் அருகே ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க வரும் முதியவர்களை ஏமாற்றி பணம் திருடியதாக என்ஜினீயர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
திருவிடைமருதூர்;
திருவிைடமருதூர் அருகே ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க வரும் முதியவர்களை ஏமாற்றி பணம் திருடியதாக என்ஜினீயர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சத்துணவு உதவியாளர்
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் ஒரு வங்கி வாசலில் மர்ம நபர்கள் சிலர், ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க வரும் முதியவர்களை ஏமாற்றி அவர்களது ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி கார்டில் இருந்து பணத்தை திருடி வந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் வேப்பத்தூர் பகுதியை சேர்ந்த சத்துணவு உதவியாளர் ஆனந்தவல்லி தனது ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுக்க திருவிடைமருதூரில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்றார். அப்போது. ஏ.டி.எம். அருகே நின்ற வாலிபர் ஒருவரிடம் ஆனந்தவல்லி தனது ஏ.டி.எம். கார்டை கொடுத்து ரூ.70 ஆயிரம் எடுத்து தருமாறு கேட்டார்.
போலி ஏ.டி.எம். கார்டு
அந்த வாலிபரும் ஆனந்தவல்லிக்கு உதவுவதுபோல் நடித்து ஏ.டி.எம்.எந்திரத்தில் கார்டை செலுத்தினார். பின்னர் அவர் எந்திரத்தில் பணம் இல்லை என ஆனந்தவல்லியிடம் கூறினார். இதன்பின் அந்த நபர் ஆனந்தவல்லியிடம் அவரது ஏ.டி.எம். கார்டை கொடுக்காமல் வேறு ஒரு போலி ஏ.டி.எம். கார்டை கொடுத்தார்.
போலி ஏ.டி.எம். கார்டை பெற்றுக்கொண்ட ஆனந்தவல்லி வெளியில் சென்று மற்ற ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க முயற்சித்தார். அப்போது பணம் வராததால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
ரூ.70 ஆயிரம் திருட்டு
இதற்கிடையே ஆனந்தவல்லியிடம் இருந்து ஏ.டி.எம். கார்டை பெற்றுக்கொண்ட மர்ம நபர் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.70 ஆயிரத்தை திருடினார். பணத்தை இழந்த ஆனந்தவல்லி திருவிடைமருதூர்பாலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து ஏ.டி.எம். மையங்களில் முதியவர்களை குறி வைத்து திருடிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
என்ஜினீயர் உள்பட 3 பேர் கைது
விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கருங்கடல் பகுதியை சேர்ந்த மோசஸ் மகன் பீட்டர் பிரபாகரன்(வயது 28), அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அய்யூர் பகுதியை சேர்ந்த மதியழகன் மகன் சிவானந்தம்(22), கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் தண்டக்காரன்குப்பம் மேலத்தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் விக்னேஷ்(19) என்பது தெரிய வந்தது.
கைதானவர்களிடம் இருந்து ஆனந்தவள்ளி பறிகொடுத்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 17 ஏ.டி.எம். கார்டுகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட பீ்ட்டர் பிரபாகரன் என்ஜினீயரிங் பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.