குமரி சோதனை சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

கனிம வளங்கள் கடத்தப்படுவதாக புகார் எழுந்ததன் எதிரொலியாக குமரி மாவட்ட சோதனை சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது களியக்காவிளை சோதனை சாவடியில் கணக்கில் வராத ரூ.15 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-09-29 21:31 GMT
களியக்காவிளை:
கனிம வளங்கள் கடத்தப்படுவதாக புகார் எழுந்ததன் எதிரொலியாக குமரி மாவட்ட சோதனை சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது களியக்காவிளை சோதனை சாவடியில் கணக்கில் வராத ரூ.15 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கனிம வளம் கடத்தல்
குமரி மாவட்டத்தில் இருந்து கனிம வளங்கள் மற்றும் ரேஷன் அரிசி ஆகியவை சோதனை சாவடி வழியாக கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. சோதனை சாவடியில் உள்ள போலீசார் லஞ்சம் வாங்கிக்கொண்டு அந்த கனிமம் மற்றும் ரேஷன் பொருட்களை கடத்தும் லாரிகளை விட்டு விடுவதாக புகார்கள் எழுந்தன.
அதைத்தொடர்ந்து சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்படி கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, வாகன சோதனையும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள களியக்காவிளை சோதனை சாவடிக்கு நேற்று காலை லஞ்ச ஒழிப்பு பிரிவு துணைசூப்பிரண்டு பீட்டர் பால் தலைமையிலான போலீசார் வந்தனர். அப்போது அங்கு சப்-இன்ஸ்பெக்டர் சைய்யது உசேன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீஸ் ஏட்டு அசோகன் ஆகியோர் பணியில் இருந்தனர்.
ரூ.15 ஆயிரம் பறிமுதல்
இதைத்தொடர்ந்து அங்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது கண்காணிப்பு கேமரா காட்சி பதிவு சாதனம் உள்ள பெட்டியில் பணங்கள் ரப்பரால் சுற்றப்பட்டு வைத்து இருந்தது தெரிய வந்தது. அங்கு இருந்த ரூ.15 ஆயிரத்தை எடுத்தனர். பின்னர் அந்த பணத்திற்கான கணக்குகளை அதிகாரிகள் கேட்டனர். அந்த பணத்துக்கு சோதனை சாவடிகளில் இருந்தவர்களால் கணக்கு காட்ட முடியவில்லை. அதைத்தொடர்ந்து ரூ.15 ஆயிரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த சோதனை பற்றி துணை சூப்பிரண்டு பீட்டர் பாலிடம் கேட்ட போது, ‘சோதனை சாவடியில் இருந்த 3 பேர் தான் இந்த பணத்துக்கு கணக்கு காட்ட வேண்டும். அதுபற்றி விசாரணை நடத்துவோம். இது தொடர்பாக துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்வோம்’ என்றார். 
ஆரல்வாய்மொழியில் சோதனை
அதே சமயத்தில் ஆரல்வாய்மொழியில் உள்ள சோதனைச்சாவடியிலும் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை நடந்தது. பிற மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் இந்த சோதனை சாவடியை கடந்து தான் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனையை தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை சூப்பிரண்டு ஹெக்டர்தர்மராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் பெஞ்சமின், சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீகுமார் மற்றும் போலீசார் நடத்தினார்கள்.
சோதனை சாவடியில் உள்ள வாகன பதிவு நடைபெறும் அலுவலகம், போலீசார் சோதனை நடத்தும் பகுதி மற்றும் அவர்கள் ஓய்வு எடுக்கும் அறை ஆகியவற்றில் சோதனை நடந்தது. மேலும் சோதனைச் சாவடியின் பின்புறம் புதர் மண்டிக்கிடக்கும் பகுதிகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். 
பணம் சிக்கவில்லை
அதோடு போலீசார் உடமைகளையும் சோதனை செய்தனர். மேலும் பணியில் இருந்த போலீசாரிடம் துருவித்துருவி விசாரணை நடத்தினார்கள். சுமார் 2 மணிநேரம் நடைபெற்ற சோதனையில் பணம் எதுவும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. 
குமரி மாவட்டத்தில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த களியக்காவிளை, ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்