மோட்டார் சைக்கிள்கள் மோதி சிறுமி-தந்தை பலி
சிவகாசியில் ேமாட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் தந்தையும், சிறுமியும் பரிதாபமாக இறந்தனர். மேலும் 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிவகாசி,
சிவகாசியில் ேமாட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் தந்தையும், சிறுமியும் பரிதாபமாக இறந்தனர். மேலும் 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பட்டாசு தொழிலாளி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஏ.லட்சுமியாபுரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 40). பட்டாசு தொழிலாளியான இவர் நேற்று காலை மனைவி வெங்கடேசுவரி (32), மகள் முத்துலட்சுமி (8) மகன் முனிப்பாண்டி (7) ஆகியோருடன் மோட்டார்சைக்கிளில் ஏ.லட்சுமியாபுரத்தில் இருந்து சிவகாசிக்கு வந்து கொண்டிருந்தார்.
சித்துராஜபுரம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் மகன் ஹரிஸ்நாத் (24). இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தனது மோட்டார்சைக்கிளில் சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் 2 மோட்டார்சைக்கிள்களும் சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.
தந்தை-மகள் பலி
இதில் முருகன், வெங்கடேசுவரி, முத்துலட்சுமி, முனிப்பாண்டி மற்றும் ஹரிஸ்நாத் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.
உடனே அருகில் இருந்தவர்கள் 5 பேரையும் மீட்டனர். அப்போது சிறுமி முத்துலட்சுமி பரிதாபமாக இறந்தாள். பின்னர் 4 பேரையும் போலீசார் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் முருகன் பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விபத்தால் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலை விபத்தில் தந்தை, மகள் பலியான சம்பவம் ஏ.லட்சுமியாபுரம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.