ஆண்டுக்கு 1,250 முகாம்கள் நடத்தப்படும் தமிழகத்தில் மீண்டும் வருமுன் காப்போம் திட்டம் - வாழப்பாடியில் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழகத்தில் மீண்டும் வருமுன் காப்போம் திட்டத்தை சேலம் மாவட்டம் வாழப்பாடியில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.;
சேலம், செப்.30-
பட்ஜெட்டில் அறிவிப்பு
கடந்த தி.மு.க. ஆட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது.
தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு நோய்கள் வருவதற்கு முன்பாக அதை கண்டறிந்து சிகிச்சை மேற்கொள்ளும் வகையிலும், நோய் நொடியின்றி வாழ வேண்டும் என்பதற்காகவும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் கடந்த 2006-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந் தேதி மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது.
அதன்பிறகு அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் கடந்த 10 ஆண்டுகளாக இந்த திட்டம் கைவிடப்பட்டது. தற்போது மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து, 2021-22-ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் ஆண்டுக்கு 1,000 சிறப்பு முகாம்கள் மூலம் மீண்டும் புதுப்பொலிவுடன் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
உற்சாக வரவேற்பு
இந்தநிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட தொடக்க விழா சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு நேற்று காலை வந்தார்.
அங்கு அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் கார்மேகம் மற்றும் அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் கார் மூலம் சேலத்தில் இருந்து வாழப்பாடிக்கு காலை 11 மணிக்கு சென்றார். அங்கு அவருக்கு அதிகாரிகள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
இதையடுத்து விழா மேடையில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மற்றும் மருத்துவ முகாமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். தொடர்ந்து அவர் பள்ளி வளாகத்தில் மருத்துவம் சார்ந்த கண்காட்சியை பார்வையிட்டார். இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 1,250 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், சேலம் மாவட்டத்தில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் இலக்கை அடைந்த அத்தனூர்பட்டி, முத்தம்பட்டி, குறிச்சி, மணிவிழுந்தான், மஞ்சக்குட்டை ஆகிய 5 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு நற்சான்றிதழ்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
கூட்டுறவு துறை
மேலும், கொரோனா நோய் தொற்றால் பெற்றோரை இழந்த 54 குழந்தைகளுக்கு ரூ.1 கோடியே 62 லட்சம் நிவாரண நிதி, உயர்கல்வி படிக்கும் 14 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1 கோடியே 91 லட்சத்து 72 ஆயிரம் கல்விக்கடனுக்கான உத்தரவுகளை முதல்-அமைச்சர் வழங்கினார்.
தொடர்ந்து கூட்டுறவுத்துறை சார்பில் ரூ.10 கோடியே 20 லட்சம் மதிப்பில் 21 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 618 உறுப்பினர்களுக்கு பயிர்க்கடன், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் 6 தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள் மூலம் 115 குழுக்களில் உள்ள 1,443 உறுப்பினர்களுக்கு சுயஉதவிக்குழு கடனுதவிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில் பொருளாதார கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 117 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.11 கோடியே 25 ஆயிரம் மதிப்பிலான பொருளாதார கடனுதவி என மொத்தம் 2,530 பயனாளிகளுக்கு ரூ.24 கோடியே 73 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், ஊரக தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாவட்ட கலெக்டர் கார்மேகம், சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், எம்.பி.க்கள் எஸ்.ஆர்.பார்த்திபன், பொன்.கவுதம சிகாமணி, சின்ராஜ், எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் ராஜேந்திரன், அருள், சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
----